எங்கள் தலையே போனாலும் தன்மானத்தை விடமாட்டோம்; சத்ரியனாக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: விஜய பிரபாகரன் பேச்சு

விஜய பிரபாகரன்: கோப்புப்படம்
விஜய பிரபாகரன்: கோப்புப்படம்
Updated on
1 min read

தேமுதிக சாணக்கியனாக அல்லாமல், சத்ரியனாக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என, விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேசினார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று (மார்ச் 09) கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக ஒதுக்கும் தொகுதிகளை ஏற்பதா, வேண்டாமா, கூட்டணியில் தொடரலாமா என்பது குறித்து மாவட்டச் செயலாளர்களிடம் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.

கேட்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்ததால், அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்று அறிவித்தார்.

இதையடுத்து, கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கட்சி நிகழ்ச்சியில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேசியதாவது:

"சாணக்கியனாக அல்ல, சத்ரியனாக இருக்க நேரம் வந்துவிட்டது. கூட்டணி தர்மம் என்ற ஒன்றால், விஜயகாந்த் நம்மைக் கட்டிப்போட்டு வைத்திருந்தார். இன்று அவருடைய அறிவிப்பால் ஆயிரம் மடங்கு சந்தோஷத்தில் இருக்கிறோம். சுதந்திரப் பறவை போன்று பறக்கிறோம்.

2005-ல் இந்தக் கட்சி எதற்காக ஆரம்பிக்கப்பட்டதோ, அந்த நோக்கத்துக்காக பயணம் செய்வோம். இத்தனை ஆண்டுகளாக, இந்தக் கட்சிக்காக என் அப்பாவுக்குத் தோள் கொடுத்து இத்தனை பேர் தூக்கிச் சுமந்திருக்கிறீர்கள். இன்று உங்களோடு நானும் இருக்கிறேன்.

இனி எதற்கு 10, 13, 15 சீட்டுகள்? விஜயகாந்துக்கு உடல்நிலை சரியில்லைதான். ஆனால், அவர் அரசியலில் இருந்து ஒதுங்கிப் போகவில்லை. வர முடியவில்லையென்றாலும் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் ஒரே தலைவர் அவர் மட்டும்தான்.

இந்த முடிவால் அதிமுக தொண்டர்களுக்குத்தான் வருத்தம் இருக்கும். எங்கள் தலைமை சரியில்லையென்று நீங்கள் சொல்லாதீர்கள். உங்கள் தலைமை சரியில்லை. எங்கள் தலைமை என்றும் சரியான தலைமை, தொண்டர்களுக்காக 24 மணி நேரமும் சிந்திக்கும் தலைமை. எடப்பாடி பழனிசாமி தன்னை எம்ஜிஆராகவோ, ஜெயலலிதாவாகவோ நினைத்துக் கொண்டிருக்கிறார்.

நான் வளரும்போது அதிமுகவினர் பேச்சைக் கேட்டால், 'புரட்சித் தலைவர் நாமம் வாழ்க, புரட்சித் தலைவி நாமம் வாழ்க' என்றுதான் சொல்வார்கள். இப்போது அந்த நாமம் எல்லாம் எங்கு போனது என்று தெரியவில்லை. இப்போது 'மோடிஜி வாழ்க', 'அமித் ஷாஜி வாழ்க' என்கின்றனர். உங்கள் கட்சி எங்கு போய்க்கொண்டிருக்கிறது என அதிமுக தொண்டர்கள் யோசிக்க வேண்டும். எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. எந்த பயமும் இல்லை.

எத்தனை மணிநேரம் வேண்டுமானாலும் உழைக்கத் தயாராக இருக்கிறோம். பொருளாதாரத்தில் பலமற்றவர்களாக இருக்கிறோம். ஆனால், நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. எங்கள் தலையே போனாலும் தன்மானத்தை விடமாட்டோம்.

காலதாமதமானது எதற்காக? தொகுதி இழுபறியோ, வேறு எதுவோ காரணம் அல்ல. உள்ளாட்சித் தேர்தலில் எப்படி நம்மை ஏமாற்றினார்கள், பழிவாங்கினார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அதற்குத் தக்க பதிலடியை வரும் தேர்தலில் கொடுக்க வேண்டும்''.

இவ்வாறு விஜய பிரபாகரன் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in