

குடிநீர் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து பாதையைக் கம்பி வேலி வைத்து அடைத்ததால் 7 குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதி அடைந்தனர்.
நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியம், மடப்புரம் ஊராட்சி, கோவில்பத்து கிராமம், கள்ளத்திடலைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ராஜலட்சுமி. இவர் மடப்புரம் ஊராட்சி மன்றத் தலைவர். இவர்கள் வசிக்கும் கள்ளத்திடல் பகுதிக்கு குடிநீர் கொண்டு வருவதற்காக, கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் கடந்த வாரம் வாழக்கரையில் இருந்து குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது.
கள்ளத்திடலில் ரமேஷின் வீட்டிற்கு அருகே குடிநீர் குழாய் பதிப்பதற்கு அதே பகுதியைச் சேர்ந்த சபாநாதன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ரமேஷ் தரப்பிற்கும், சபாநாதன் தரப்பிற்கும் தகராறு ஏற்பட்டது. இது குறித்து திருக்குவளை போலீஸார் கடந்த வாரம் ரமேஷ் மீது வழக்குப் பதிந்தனர்.
குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்த சபாநாதன், கள்ளத்திடல் பகுதியில் வசிக்கும் ரமேஷ் உட்பட 7 குடும்பத்தினர் செல்லும் பாதையைக் கம்பி வேலி வைத்து நேற்று (திங்கட்கிழமை) அடைத்தார். ஆற்றங்கரையை ஒட்டி கம்பி வேலி கொண்டு அடைக்கப்பட்டு இருப்பதால் 7 குடும்பத்தில் வசிக்கும் 30க்கும் மேற்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.
தாங்கள் தலித் மக்கள் என்பதால் கம்பி வேலி கொண்டு அடைத்து, தகாத வார்த்தைகளால் பேசி வருவதாக சபாநாதன் மீது அப்பகுதி மக்கள் திருக்குவளை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
தகவலறிந்த திருக்குவளை வட்டாட்சியர் விஜயகுமார், திருக்குவளை போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பாதையை அடைத்துள்ள சபாநாதன், அந்தப் பாதை தன்னுடைய பட்டா நிலம் என்று காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தார். ரமேஷ் தரப்பினர் தலைமுறை தலைமுறையாக இந்தப் பாதையைப் பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்ததும் நிலத்தை அளந்து, யாருக்கும் பாதகம் இல்லாமல் பாதை அமைத்துக் கொள்ளலாம் என வருவாய்த்துறை மற்றும் போலீஸார் தெரிவித்தனர். அதையடுத்து போலீஸார் தெருவை அடைத்துள்ள வேலியை அகற்றினர்.