

அதிமுக அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என, தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிக தரப்பில் ஆரம்பத்தில் 41 தொகுதிகள் கேட்கப்பட்டதாகவும், கூட்டணியில் மற்ற கட்சிகளும் இருப்பதால் இவ்வளவு இடங்களைத் தர முடியாது என அதிமுக மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, 23 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டுமென அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையின்போது அதிமுகவிடம் தேமுதிக வலியுறுத்தியது.
அதிமுக தரப்பில் அதிகபட்சமாக 15 தொகுதிகள் வரையிலும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் தேமுதிகவுக்கு வழங்க முன்வந்திருப்பதாகத் தகவல் வெளியானது. ஆனால், இதனை தேமுதிக ஏற்கவில்லை. தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், தேமுதிக- அதிமுக இடையே நடந்த மூன்று கட்டப் பேச்சுவார்த்தைகளும் பலனளிக்கவில்லை.
இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று (மார்ச் 09) கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில், அதிமுக ஒதுக்கும் தொகுதிகளை ஏற்பதா, வேண்டாமா, கூட்டணியில் தொடரலாமா என்பது குறித்து மாவட்டச் செயலாளர்களிடம் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். கேட்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்ததால், அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகுவதாக, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்று அறிவித்தார்.
இதையடுத்து, கட்சித் தலைமை அலுவலகம் முன்பு தொண்டர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். "நாளைய முதல்வர் கேப்டன்" என கோஷங்களை எழுப்பினர்.
இதன்பின், அங்கு செய்தியாளர்களிடம் பேசிய துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், "தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்தத் தொண்டர்களின் கருத்துகளை மாவட்டச் செயலாளர்கள், தலைவர் விஜயகாந்த்திடம் தெரிவித்தனர். அதனடிப்படையில், நாங்கள் கேட்ட தொகுதிகளின் எண்ணிக்கையும் தொகுதிகளும் கிடைக்காததால், அதிமுக - பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இன்றைக்கு எங்களுக்கு தீபாவளி. 234 தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழக்கும். அதிமுகவில் பாமகவின் ஸ்லீப்பர் செல்லாக கே.பி.முனுசாமி இருக்கிறார். அவர் அதிமுகவுக்குச் செயல்படவில்லை. அவர் பாமகவின் கொள்கை பரப்புச் செயலாளராக அங்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்" எனத் தெரிவித்தார்.