Published : 09 Mar 2021 01:09 PM
Last Updated : 09 Mar 2021 01:09 PM

திமுகவின் வாக்குறுதிகள் பொய்யானவை; தேமுதிக கட்டாயம் எங்கள் கூட்டணிக்கு வரும்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

திமுகவின் அனைத்து வாக்குறுதிகளும் பொய்யானவை என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை திருமங்கலத்தில் பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். திருச்சி மாநாட்டில் திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் வெளியிட்ட 7 தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அக்கேள்விக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதிலளிக்கும்போது, “எல்லோருக்கும் இரண்டு ஏக்கர் நிலம் தருவேன் என்று திமுகவினர் சொன்னார்கள். நான்கு முறை தமிழகத்திற்கு முதல்வராக இருந்த கலைஞர் ஐந்தாவது முறையாக முதல்வராவதற்கு 2 ஏக்கர் நிலம் தருவேன் என்று சொன்னார். அதனை மக்கள் நம்பி ஓட்டு போட்டார்கள். திமுக வென்றது. நான்கு முறை முதல்வராக வெற்றி பெற்ற கலைஞர், கொடுக்கும் அளவிற்கு இவ்வளவு நிலம் தமிழகத்தில் இல்லை என்பது இப்பொழுதுதான் தெரிகிறது என்று சொன்னார். இதைவிட மோசமான பொய் இருக்க முடியுமா?

திமுகவின் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யான வாக்குறுதிகள். அதேபோல்தான் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த 7 வாக்குறுதிகளும் ஏமாற்று வாக்குறுதிகள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ளது. வரும் தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி பெறும். தேமுதி கட்டாயம் எங்கள் கூட்டணிக்கு வரும்” என்று பதிலளித்தார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலும் அதே தேதியில் நடைபெற உள்ளது. பாஜக சார்பில் கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x