Published : 09 Mar 2021 12:54 PM
Last Updated : 09 Mar 2021 12:54 PM

தனிநபர் வருமானத்தை எப்படி உயர்த்துவீர்கள்? சரியான விளக்கம் தந்தால் நான்கூட திமுகவில் இணைகிறேன்: சீமான் பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சியின் ஆட்சி அமைந்தால் இலவசங்களே தேவையில்லை என்ற நிலையை உருவாக்குவோம் என்றும், மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்குக் கொடுக்க நிதி எங்கிருந்து வரும் என்றும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

வரும் ஏப்.6-ம் தேதி தமிழக சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. குறைவான நாட்களே இருக்கும் நிலையில், அதிமுக, திமுகவில் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு குறித்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை, சென்னையில் கடந்த 7-ம் தேதி ஒரே மேடையில் சீமான் அறிமுகப்படுத்தினார். உடனடியாகத் தமது கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார்.

திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு பிரச்சாரத்தில் ஈடுபட்டு சீமான் தனக்காக வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், ''நாம் தமிழர் கட்சியின் ஆட்சி அமைந்தால் மக்களின் வாழ்க்கைத் திறனை உயர்த்துவோம். அரசுப் பள்ளியில் பயிலும் அனைவருக்கும் அரசு வேலை வழங்கும் நிலையை உருவாக்குவோம்.

இலவசங்களையும் கவர்ச்சித் திட்டங்களையும் அறிவித்து மக்களை ஏமாற்ற நாங்கள் தயாராக இல்லை. ஒரு கிலோ அரிசி ரூ.500க்கு விற்றாலும் அதை வாங்கிச் சாப்பிடும் அளவுக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவோம். இலவசங்களே தேவையில்லை என்ற நிலையை உருவாக்குவோம்.

தனிநபர் வருமானத்தை எப்படி ரூ.4 லட்சத்தில் இருந்து 35 லட்சம் ரூபாயாக உயர்த்துவீர்கள்? இதற்கு சரியான விளக்கம் கொடுத்தால் நான்கூட உங்களின் கட்சியில் (திமுக) வந்து இணைந்து கொள்கிறேன். அப்படியே தனிநபர் வருமானத்தை உயர்த்தினால் எதற்கு இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்கிறீர்கள்? அதற்கான நிதி எங்கிருந்து வரும் என்பதைத் தெளிவாகச் சொல்லுங்கள்'' என்று சீமான் கேள்வி எழுப்பினார்.

'ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள்' என்ற தலைப்பில் அண்மையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை அளிக்கப்படும் என்ற தொலைநோக்குத் திட்டத்தை திமுக சார்பில் அதன் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x