

டெங்கு காய்ச்சல் பற்றிய வெள்ளை அறிக்கை ஒன்றை அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை மாநகரில் குறிப்பாக, வடசென்னையில் சிறிது மழை பெய்தால் கூட மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிவிடுகிறார்கள். எளிய உழைப்பாளிகள் நிறைந்த குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து பல நாட்கள் தண்ணீர் வெளியேறுவதற்கு கூட வாய்ப்பு இல்லாமலேயே போய்விடுகிறது.
குப்பைகளும், மனித கழிவுகளும் அகற்றப்படுவதற்கு வாய்ப்பில்லாமல் தண்ணீரோடு கலந்து பல்வேறு தொற்று நோய்கள் வருகின்றன. என்ன வியாதிகள் என்று கண்டு பிடிக்க முடியாத வகையில் மர்ம நோய்களில் மீளமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் மக்கள்,
இப்பொழுது பெய்த மழையில் ஆர்.கே.நகர், பெரம்பூர் வியாசர் பாடி பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெங்கு நோய் பெரும் அளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவ மனைகளிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள், கூட்டம் கூட்டமாக குவிந்து நிற்கிறார்கள். அரசாங்கத்தின் உதவி மக்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை என்பது உண்மையாகும். உண்மை நிலவரத்தை அரசாங்கம் மூடி மறைப்பதாக ஊடகங்களும் பொது மக்களும் சந்தேகப்படுகிறார்கள். டெங்கு காய்ச்சல் பற்றிய வெள்ளை அறிக்கை ஒன்றை அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.
வெள்ளக் காலங்களில் தண்ணீர் வெளியேறும் பாதைகள் முழுமையாக அடைத்துவிட்டன. இதற்கு தொலைநோக்கு பார்வையுடன் நடவடிகை எடுப்பதும், இதற்கு தேவையான திட்டங்களை உருவாக்குவதும் அரசின் உடனடி கடமையாகும். இதற்கான மாஸ்டர் திட்டம் ஒன்றை அரசு உருவாக்க வேண்டும்.
குடிசை மாற்று வாரிய வீடுகள் வடசென்னையில் குறிப்பாக ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதிகளில் அதிகம் இருக்கின்றன. இங்கு தான் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருக்கின்றது. இதற்கு வெறும் ஊடக விளம்பரங்களோடு நிறுத்துக் கொள்ளாமல், பொறுப்பான கடமைகள் உடனடியாக செய்யப்பட வேண்டும். துறைமுகப் பகுதியில் பல காலம் வீடு இல்லாமல் சாலை ஓரங்களில் வாழும் மக்கள் பெரும் துயரத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
உலகமயம், என்றும், அந்நிய மூலதனங்களின் வருகை என்றும் சென்னையின் ஒருபகுதி பிரமாண்டமானதாக காட்டப்படுகிறது, ஆனால் சாக்கடையிலும், நோயிலும் சிக்கி, வாழ்வதற்கு வாழும் எளிய மக்களின் துயரம் போக்கு அரசு பொதுமக்களின் உதவியோடு உரிய நடவடிகைகளை எடுக்க வேண்டும்.
கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு மக்களுக்கு நிவாரண உதவிகளில் ஈடுபடுவர்'' என்று சி.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.