

திடீரென பெய்த கனமழையால் நேற்று முன்தினம் இரவில் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி சென்னை நகரமே ஸ்தம்பித்தது.
சென்னையில் நேற்று முன்தினம் இரவில் பெய்த கனமழை தலைநகரையே தலைகீழாக புரட்டிப் போட்டுவிட்டது. மதியத்துக்கு மேல் 4 மணிநேரத்தில் 14 செ.மீட்டர் மழை கொட்டியது. திடீரென பெய்த கன மழையால் சாலைகள், ஆறுகளாக மாறின. இதனால் போக்கு வரத்து நிலைகுலைந்து போனது.
முக்கிய சாலைகளான அண்ணா சாலை, ஜி.எஸ்.டி. சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, பழைய மாமல்லபுரம் சாலை (ஓ.எம்.ஆர்.), கிழக்கு கடற்கரை சாலை, ஜவஹர்லால் நேரு சாலை, ஆற்காடு சாலை, திருவான்மியூர் செல்லும் எல்.பி.சாலை, வேளச்சேரி செல்லும் சர்தார் பட்டேல் சாலை, மெரினா கடற்கரை சாலைகளில் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அசைய முடியாமல் அப்படியே நின்றன.
இதனால் இந்த சாலைகளை ஒட்டியுள்ள நந்தனம், தி.நகர், எழும்பூர், பாரிமுனை, புரசை வாக்கம், கிண்டி, வடபழனி, போரூர், விருகம்பாக்கம், கோயம் பேடு, ஈக்காட்டுதாங்கல், நந்தனம், சைதாப்பேட்டை,போரூர், பூந்தமல்லி, சூளைமேடு, நுங்கம் பாக்கம், அடையாறு, வேளச்சேரி, ஆலந்தூர் உட்பட சென்னையின் அனைத்து பகுதிகளிலும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.
ஜிஎஸ்டி சாலையில் மழை வெள்ளம் தேங்கியதால் புறநகர் பகுதிகளான தாம்பரம், கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர் பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாகனங்கள் நகர முடியாமல் ஊர்ந்து சென்றன. போக்குவரத்தை சீரமைக்க போலீஸார் பெரிதும் சிரமப்பட்டனர்.
அண்ணா சாலையில் ஒரு கி.மீ. தொலைவை கடக்க ஒரு மணி நேரத்துக்கு மேலானது. நேற்று முன்தினம் மாலையில் அலுவலகம் முடிந்து புறப்பட்ட பலர் அதிகாலை 2.30 மணியளவில்தான் வீடு போய் சேர்ந்துள்ளனர். பலர், அலுவலகத்துக்கே திரும்பிச் சென்று இரவு அங்கேயே தங்கிவிட்டு காலையில்தான் வீடு சென்றுள்ளனர்.
நெரிசலுக்கான காரணம் குறித்து பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸார் சிலர் கூறியதாவது:
கனமழையால் உட்புற சாலைகளில் வெள்ளம் தேங்கி நின்றதால், வாகன ஓட்டிகள் அனைவரும் அண்ணா சாலை போன்ற பிரதான சாலைக்கு வந்தனர். பிரதான சாலைகளில் இருபுறமும் தண்ணீர் தேங்கி நிற்க, குறுகிய சாலையில் அதிக வாகனங்கள் செல்ல முயன்றன. அத்துடன் மழை வெள்ளத்தில் சிக்கி இருசக்கர வாகனங்களும் கார்களும் பழுதாகி நடுரோட்டில் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாம்பரம், கூடுவாஞ்சேரி பகுதிகளில் ஜிஎஸ்டி சாலையில் ஏரி உடைந்து வெள்ளம் வருகிறது என்ற வதந்தி பரவியதால், அந்த வழியே சென்ற பலர் மீண்டும் சென்னைக்குள் வந்தனர். இதுவும் போக்குவரத்து நெருக்கடிக்கு ஒரு காரணம்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே செய்து முடித்திருக்க வேண்டிய சாலை விரிவாக்க பணிகளை இப்போதுதான் செய்ய தொடங்கி இருக்கிறோம். 10 லட்சம் வாகனங்கள் செல்ல தகுதியான சென்னை நகர சாலைகளில் 30 லட்சம் வாகனங்கள் ஒரே நேரத்தில் செல்வதுதான் பிரச்னைகளுக்கு அடிப்படை காரணம். சென்னையிலும் புறநகர்களிலும் சாலை விரிவாக்கம் அவசிய, அவசர தேவையாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.