

அதிகாரிகளின் தொடர் சோதனையால் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி,சிவகாசியில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் உற்பத்தியை நிறுத்தினர். இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றித் தவித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதைச் சுற்றிஉள்ள பகுதிகளில் 1,070 பட்டாசு ஆலைகளும், 1,694 பட்டாசு கடைகளும் இயங்கி வருகின்றன. இத்தொழிலில் நேரடியாக 2 லட்சம் தொழிலாளர்களும் மறைமுகமாக 3 லட்சம் பேரும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்துகளால் 2010-ல் 15 பேர், 2011-ல் 40 பேர், 2012-ல் 55 பேர், 2013-ல் 31 பேர், 2014-ல் 19 பேர், 2015-ல் 6 பேர், 2016-ல் 27 பேர், 2017-ல் 13 பேர், 2018-ல்34 பேர், 2019-ல் 10 பேர், 2020-ல்27 பேர், இந்த ஆண்டில் இதுவரை31 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக கடந்த மாதம் 12-ம்தேதி சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மட்டும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளிலும் விதிமீறல் உள்ளதா என்பதைக் கண்டறிய வட்டாட்சியர்கள் தலைமையிலான 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் கடந்த இரு வாரங்களாக பட்டாசு ஆலைகளில் சோதனை நடத்தி, விதிமீறல் கண்டறியப்பட்டால் தொடர்புடைய ஆலைகளுக்கு ‘சீல்’ வைத்து வருகின்றனர்.
80 ஆலைகளுக்கு ‘சீல்’
மேலும் ஆலைக்கான உரிமத்தையும் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர். இதுவரை 80-க்கும் மேற்பட்ட ஆலைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அதிகாரிகளின் சோதனையால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக்கூறி, சிவகாசி மற்றும் அதைச்சுற்றியுள்ள பட்டாசு ஆலைகள் அனைத்தும் நேற்று முதல் மூடப்பட்டுள்ளன. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைஇன்றித் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பட்டாசு ஆலை உரிமையாளர் விநாயமூர்த்தி கூறுகையில், கடந்த இரு வாரங்களில் 80-க்கும் மேற்பட்ட ஆலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. அந்த பட்டாசு ஆலைகளில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அதிகாரிகளின் திடீர் நடவடிக்கைகளால் பட்டாசுஉற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் குழப்பத்தில் உள்ளோம்.
ஏற்கெனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பு, பேரியம் பயன்படுத்தத் தடை, சரவெடி உற்பத்தி செய்யத்தடை, தொடர் விபத்து போன்ற காரணங்களால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சோதனை நடத்தும் அதிகாரிகள், சிறு குறைகள் காணப்பட்டாலும் உடனடியாக ஆலைக்கு ‘சீல்’ வைத்துவிடுகின்றனர்.
அதற்கு பதிலாக நோட்டீஸ் வழங்கி, குறைகளை சரிசெய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனக்கோருகிறோம். அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தொழிலுக்குச் சாதகமான சூழ்நிலை ஏற்பட்டால்தான் மீண்டும் ஆலைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார்.