அறிவியல் தமிழறிஞர் இராம.சுந்தரம் காலமானார்

இராம.சுந்தரம்
இராம.சுந்தரம்
Updated on
1 min read

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவரும், அனைத்திந்திய அறிவியல் தமிழ் கழகத் தலைவரும், அறிவியல் தமிழறிஞருமான இராம.சுந்தரம் (83) உடல்நலக் குறைவு காரணமாக தஞ்சாவூரில் அவரது இல்லத்தில் நேற்று காலை காலமானார்.

ராமநாதபுரம் மாவட்டம் அலவாக்கோட்டையில் 1938 ஏப்.1-ல்பிறந்த அவர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராக பணியாற்றினார். பின்னர், 1981 முதல்தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர்ச்சித் துறைஇயக்குநராகவும், 1987 முதல் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை பேராசிரியராகவும், 1997 முதல் முதுநிலை பேராசிரியராகவும் பணியாற்றி 1998-ம் ஆண்டில் ஓய்வுபெற்றார்.

அவர் நேஷனல் புக் டிரஸ்ட், சாகித்ய அகாடமி உள்ளிட்ட பதிப்பகங்களிலும், தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் இதர பல்கலைக்கழகங்களிலும் 10-க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். மேலும், பதிப்பாசிரியராக இருந்து 35-க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். பல்வேறு அறிவியல் நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

அவரிடம் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பொறியியல், மருத்துவப் படிப்புகளைத் தமிழில் கற்பிக்கும் பொறுப்பை முதல் துணைவேந்தர் வ.அய்.சுப்பிரமணியம்வழங்கினார். பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கான பாட நூல்களைத் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்த இராம.சுந்தரம், தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் களஞ்சியத்திலும் பணியாற்றி உள்ளார்.

இராம.சுந்தரத்தின் இறுதிச் சடங்கு இன்று (மார்ச் 9) காலைதஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி செல்லையா நகரில் உள்ளஅவரது இல்லத்தில் நடைபெறஉள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in