

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் நரசிம்மருக்கு ஆனி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக இத்திருவிழா தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய பிரம்மோற்சவ விழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 5 மணியளவில் நரசிம்மர் திருத்தேரில் எழுந்தருளினர். அதைத்தொடர்ந்து, காலை 7 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வரும் 11-ம் தேதி இரவு 9 மணிக்கு சப்தாவர்ணம் எனும் சிறிய திருத்தேர் நிகழ்வுடன் பிரம் மோற்சவ விழா நிறைவடைய உள்ளது.