Published : 09 Mar 2021 03:12 AM
Last Updated : 09 Mar 2021 03:12 AM

44-வது சென்னை புத்தகக் காட்சி இன்று நிறைவடைகிறது; வாசிப்பு பழக்கம் மனிதநேயத்தை வளர்க்கும்: ரயில்வே ஐஜி வனிதா கருத்து

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) 44-வது சென்னைபுத்தகக் காட்சி, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. மகளிர் தினத்தையொட்டி நேற்று நடந்த இலக்கிய நிகழ்ச்சிக்கு ரயில்வே ஐஜி வே.வனிதா தலைமை தாங்கி பேசினார். அவர் கூறியதாவது:

புத்தக வாசிப்பு என்பது சுவாசிப்பு போன்றது. வாசிப்பு பழக்கத்தால் கேள்வி கேட்கும் மனோபாவம் வரும். பெண்களுக்கு கேள்வி கேட்க கற்றுக்கொடுத்தவர் பாரதி. படிப்பு அறிவும் தரும். முழுமையாக படித்தால் படிப்பு அகங்காரத்தை தராது. வாசிப்பு சகமனிதனை மனிதாக நேசிக்கும் பார்வையைத் தரும். இவ்வாறு வனிதா கூறினார்.

‘ஐரோப்பாவில் பெண் எழுச்சிக்கு வித்திட்ட நூல் வாசிப்பு’ என்ற தலைப்பில் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் க.சுபாஷினியும், ‘நடுவுல கொஞ்சம் அறிவியலை காணோம்’ என்ற தலைப்பில் மனநல மருத்துவர் ஷாலினியும், ‘புத்தகங்கள் பெண்களின் ஆயுதங்கள்’ என்ற தலைப்பில் ஊடகவியலாளர் சுகிதா சாரங்கராஜும் கருத்துரை வழங்கினர்.

முன்னதாக, பபாசி செயற்குழு உறுப்பினர் பி.எம்.சிவக்குமார் வரவேற்றார். நிறைவாக பபாசி நிரந்தர புத்தகக் காட்சி நிர்வாகி பி.குமரன் நன்றி கூறினார்.

சென்னை புத்தகக் காட்சி இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவடை கிறது. மாலை 6 மணிக்கு நடக்கும்நிறைவுநாள் நிகழ்ச்சியில் பதிப்புத் துறையில் 25 ஆண்டுகள் சேவை புரிந்தோருக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் விருதுகள் வழங்கி உரையாற்று கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x