

வேடந்தாங்கல் ஏரி நிரம்பியதை அடுத்து சரணாலயத்துக்கு 25 ஆயிரம் வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளன. இதையடுத்து பார்வை யாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
சென்னையில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகில் வேடந்தாங்கல் பறவைகள் சரணா லயம் அமைந்துள்ளது. இங்கு நிலவும் இதமான தட்பவெப்பச் சூழல் காரணமாக ஆண்டுதோறும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் இனப் பெருக்கத்துக்காக வருகின்றன. பின்னர் குஞ்சுகளுடன் தாய்நாடு திரும்புகின்றன.
தமிழகத்திலுள்ள 15 சரணால யங்களில் வேடந்தாங்கல் பழமை யானதாகும். இந்த சரணாலயத்தை இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசு 1798-ம் ஆண்டு அடையாளம் கண்டு 1858-ல் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் மேம்படுத்தப்பட்டது. அப்போது இருந்த மெட்ராஸ் வனச்சட்டப்படி பாதுகாக்கப்பட்டு வந்த அப்பகுதி பின்னர், 1972-ம் ஆண்டு உருவாக் கப்பட்ட வன உயிரின பாதுகாப்பு சட்ட விதிகளின் கீழ் கடந்த 1988-ம் ஆண்டு வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் என்று தமிழக அரசு அறிவித்தது.
இத்தகைய பழமை வாய்ந்த சரணாலயத்தில் கடந்த இரு ஆண்டுகளாக பருவமழை பொய்த் ததால் ஏரியில் நீர் இல்லை. அதனால் பறவைகள் வரத்து குறைந்ததுடன், பார்வையாளர் களின் எண்ணிக்கையும் குறைந்து வெறிச்சோடிக் காணப்பட்டது.
இந்த ஆண்டு நவம்பர் மாத தொடக்கத்திலிருந்தே பெய்த கனமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பிய நிலையில், வேடந்தாங்கல் ஏரியும் நிரம்பியது. இதனால் இங்கு பறவைகளின் வரத்து தற்போது அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது ஆஸ்திரேலியா, சீனா, நேபாளம், பாகிஸ்தான், சுவிட்சர் லாந்து, கனடா, இலங்கை, சைபீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் 15 பறவை இனங்களைச் சேர்ந்த 25 ஆயிரம் பறவைகள் வந்துள்ளன.
குறிப்பாக கூழைக்கடா, கரண்டி வாயன், நத்தைக்கொத்தி நாரை, ஊசிவால் வாத்து, சாம்பல் நிற நாரை, வண்ண நாரை, பாம்பு தாரா உள்ளிட்டவைகள் வந்துள்ளன. இவை தற்போது ஏரியில் உள்ள மரங்களில் கூடுகளைக் கட்டவும் தொடங்கியுள்ளன. அதனால் கடந்த சில நாட்களாக பார்வை யாளர்களின் வருகையும் அதிகரித்துள்ளது.
இந்த பறவைகளுக்கு இரையை உருவாக்குவதற்காக 1 லட்சம் மீன் குஞ்சுகளை ஏரியில் விட திட்டமிட்டிருக்கிறோம். பருவ மழை முடியுவதற்கு முன்பாக விட்டால், அடுத்த மழைக்கு மீன் குஞ்சுகள் ஏரியை விட்டு வெளியேறிவிடும் என்பதால், பருவ மழை முடிந்த பிறகு, ஏரியில் மீன் குஞ்சுகள் விடப்படும்.
இங்கு பறவைகளை பார்வையாளர்கள் அருகிலிருந்து பார்க்கலாம். மிக மிக அருகில் பார்க்கும் வகையில் பைனாகுலர் வசதியும் உள்ளது. உயரத்தில் இருந்து பறவைகளை பார்க்கும் விதமாக பார்வை கோபுரங்களும் உள்ளன. இங்கு சிறுவர்களுக்கு ரூ.2-ம், பெரியவர்களுக்கு ரூ.5-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்றார்.
போக்குவரத்து வசதி
சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து இயக்கப் படும் சில மின்சார ரயில்களில் ரூ.20 கட்டணத்தில் மதுராந்தகம் சென்று அங்கிருந்து அரசு பஸ்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் வேடந்தாங்கலை அடையலாம். செங்கல்பட்டிலிருந்தும் பஸ் வசதி உள்ளது. ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் மூடப்படும். அதுவரை விடுமுறையின்றி சரணாலயம் திறந்திருக்கும்.