

சிவகங்கை மாவட்ட மொத்த கூட்டுறவு விற்பனை பண்டக சாலையில் (பாம்கோ) தேர்தல் நேரத்தில், அதன் தலைவர் நாகராஜன் கூட்டம் நடத்தி பொருட்களை கொள்முதல் செய்வதாகப் புகார் எழுந்தது.
பாம்கோ நிறுவனம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு வகைகளைக் கொள்முதல் செய்து ரேஷன் கடைகளுக்கு விநியோகித்து வருகிறது. மேலும், வருமானத்தை அதிகரிக்க ரவை, மைதா போன்ற பொருட்களையும் தனியாரிடம் கொள்முதல் செய்து ரேஷன்கடை மூலம் விற்கிறது.
இந்நிலையில் தேர்தல் அறி விக்கப்பட்டதால் கூட்டுறவு நிறு வனங்களில் கூட்டம் நடத்த தடை உள்ளது. ஆனால், பாம்கோ நிறுவனத்தில் தலைவர் நாகராஜன் தலைமையில் கூட்டம் நடத்தி சோப்பு, பொட்டுக்கடலை, பற்பசை உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து வட்டாட்சியர் உமா மகேஸ்வரி தலைமையிலான பறக்கும்படையினர் அங்கு விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து பாம்கோ தலைவர் நாகராஜன் கூறுகையில், ‘ தேர்தல் விதிமுறையில் கூட்டம்தான் நடத்தக் கூடாது. நாங்கள் கூட்டம் நடத்தவில்லை. ஆனால், நான் அலுவலகத்துக்கு வரக்கூடாது என்று யார் சொன்னது. நான் வரவில்லை என்றால் எப்படி ஊதியம் வழங்குவது’ என்று தெரிவித்தார்.