

ஒரு பேராசிரியர் பணி ஓய்வு பெற்றதற்காக அவரிடம் படித்த மாணவர்கள், படித்துக் கொண்டி ருக்கிற மாணவர்கள், அவரது அபிமானிகள் பலர் நேரில், மின்னஞ் சலில், சமூக வலைதளங்களில், கைபேசிகளில் என்றில்லாமல் குறுந்தகவல்கள் மூலமும், கடிதம் வழியாகவும் கண் கலங்கினர்.
மாணவர்களிடம் அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவர் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் ஜான் குமார். கடந்த ஜூன் 1-ம் தேதி தனது பேராசிரியர் பணியை இவர் நிறைவு செய்தபோது வெளிப்பட்டதுதான் இத்தனையும்.
திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நெகிழ்ச்சி…
அநீதிக்கு எதிராகப் பொங்கியெழும் பேராசிரியராக ‘ரமணா’ திரைப்படத்தில் வரும் கதாபாத்திரம் இவரை மனதில் வைத்து உருவாக்கப்பட்டதே. அப்படத்தின் இயக்குநர் முருக தாஸ் இவரின் மாணவர். தனது நண்பர்களிடமும் கலந்து கொள் ளும் விழாக்களிலும் ஜான் குமாரைப் பற்றி குறிப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் முருகதாஸ். பேராசிரியர் தன்னுள் ஏற்படுத்திய பாதிப்புதான் ‘ரமணா’ திரைப்படம் உருவாகக் காரணம் என சில ஆண்டுகளுக்கு முன்பு பிஷப் ஹீபர் கல்லூரி விழாவில் கலந்து கொண்ட திரைப் பட இயக்குநர் முருகதாஸ் பேசியபோது அரங்கமே அதிர்ந்தது.
மாணவர்களிடம் பாடத் திட்டத்தைத் தாண்டி சமூக அக்கறையை இதமாகச் சொல்லி நல்வழிப்படுத்துவதில் இவருக்கு நிகர் யாருமில்லை என புகழாரம் சூட்டுகிறார் கடலூர் அரசுக் கல்லூரி பேராசிரியரும் பிஷப் ஹீபர் கல்லூரி முன்னாள் மாணவ ருமான சேதுராமன்.
பெரும்பாலான மாணவர்கள் ஆசிரியர் பணியில்…
இவரிடம் பயின்ற நேர்மை தவறாத முன்னாள் மாணவர்கள் (சுங்கத்துறை அலுவலராக பணிபுரியும் ஐ.ஆர்.எஸ் அதிகாரி திலீபன், தமிழ்நாடு பார் கவுன்சில் முன்னாள் தலைவர் சந்திரமோகன், திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட) பலர் நாடு முழுவதும் அநீதிக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருக் கின்றனர். பலர் கல்லூரி, பள்ளி ஆசிரியர்களாக செயல்பட்டு பொறுப்புள்ள மாணவ சமுதா யத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பேராசிரியர் ஜான் குமார் அடிப்படையில் ஒரு காந்தியவாதி. நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், அங்கு பள்ளி படிப்புக்குப் பின் சென்னை விவேகானந்தா கல்லூரியில் பட்டப்படிப்பும் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைப் படிப்பும் முடித்தவர்.
கல்லூரி பேராசிரியராக இருந்துகொண்டே 2003-ம் ஆண்டு ‘மக்கள் விழிப்புணர்வு இயக்கம்’ என்கிற பெயரில் ஓர் அமைப்பை ஏற்படுத்தி கிராமங்களுக்குச் சென்று கல்வி விழிப்புணர்வு, மது தவிர்ப்பு, ஊழல் எதிர்ப்பு பிரச்சாரம் செய்துவருகிறார்.
பேராசிரியர் ஜான் குமார் ‘தி இந்து’விடம் பேசும்போது, “பிரகாசமான எதிர்கால இந்தியா வகுப்பறைகளில் உருவாக்கப் படுகிறது என்ற பிரபல கல்வியாளர் கோத்தாரியின் வார்த்தைகள் என்னை மிகவும் ஈர்த்தது. நல்ல முன்னுதாரணமான பெற்றோரும், ஆசிரியரும் கிடைக்கும் மாணவன் நல்லவிதமாக வளர்வான். ஓர் ஆசிரியர் நல்ல சமூகத்தை உரு வாக்க முடியும். நல்ல விஷயத் தின் தொடக்கப் புள்ளிகளாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும். 48 ஆண்டுகளுக்கு முன்பு என் 5-ம் வகுப்பு ஆசிரியர் ராமச் சந்திரன் என்னுள் ஏற்படுத்திய பாதிப்பால்தான் சமூக மாற்றத் துக்காக உழைக்கும் ஆசிரியராக வர வேண்டும் என நினைத்தேன். அது நிறைவேறியது” என்றார் மகிழ்ச்சியுடன்.
சட்டமும் படித்த இவர், “பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் அநீதிக்கு எதிராக என் குரல் ஒலிப்பது தொடரும். அநீதிக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்த எனது மீதி நாட்களைப் பயன்படுத்துவேன்” என்கிறார் ஜான் குமார். தொடரட்டும் இவரது சமூக அக்கறைப் பணிகள்.