புதிய லாரி புக்கிங் அலுவலகம் திறக்க எதிர்ப்பு: மோதல் சிஐடியுவினர் 8 பேர் கைது

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் புதிய லாரி புக்கிங் அலுவலகம் திறக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்குதலில் ஈடுபட்ட சிஐடியு அமைப் பினர் 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள 18 லாரி புக்கிங் அலுவலகங்களில் பணிபுரியும் சுமைப் பணி தொழிலாளர்கள் தங்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதில், லாரி உரிமையாளர்களில் 7 பேர் கூலி உயர்வு தருவதாக ஒப்புக் கொண்டனர். எஞ்சிய உரிமையாளர்கள் ஒப்புக்கொள்ளாததால் தொழிலாளர் துறை உதவி ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்தச்சூழலில், காந்தி மார்க்கெட் பகுதியில் செயல்பட்டு வந்த லாரி புக்கிங் அலுவலகத்தை மூடிவிட்டு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உதவியுடன் திருச்சி- தஞ்சாவூர் சாலையில் புதிய லாரி புக்கிங் அலுவலகத்தைத் திறக்க லாரி உரிமையாளர்களில் ஒரு தரப்பினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்தநிலையில், புதிய லாரி புக்கிங் அலுவலகம் நேற்று திறக்கப்பட்டதையடுத்து, சிஐடியு சுமைப் பணித் தொழிலாளர்கள் அங்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். இதில், புதிய லாரி புக்கிங் அலுவலகத்தில் இருந்த பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பலருக்கு காயம் ஏற்பட்டது.

இதைக்கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் வீ.கோவிந்தராஜூலு உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, மோதல் தொடர்பாக சிஐடியு நிர்வாகியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர் மாவட்டச் செயலாளருமான ஆர்.ராஜா, சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ஜி.கே.ராமர் உட்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பின்னர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கி ரமராஜா செய்தியாளர்களிடம் கூறியது: இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும். இதில் தொடர்புடைய ராஜா, ராமர் போன்றோரை அவர்கள் சார்ந்த கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்த உள்ளோம்.இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வு ஏற்படாவிட்டால், கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in