வாக்குச்சாவடி மையம் அமைக்காததை கண்டித்து கலசப்பாக்கம் அருகே கருப்பு கொடி போராட்டம்: சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிப்போம் என எச்சரிக்கை

கலசப்பாக்கம் அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்கா ததைக் கண்டித்து நேற்று கருப்புக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
கலசப்பாக்கம் அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்கா ததைக் கண்டித்து நேற்று கருப்புக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
Updated on
1 min read

கலசப்பாக்கம் அருகே அய்யம்பாளையம் கிராமத்தில் வாக்குச் சாவடி அமைக்கவில்லை என்றால், சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிப்போம் என கூறி கருப்புக் கொடி போராட்டத்தில் கிராம மக்கள் நேற்று ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த சிறுவள்ளூர் ஊராட்சி அய்யம்பாளையம் கிராமத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்படவில்லை. இதனால், 5 கி.மீ., தொலைவில் சேங்கபுத்தேரி கிராமத்தில் உள்ள வாக்குச்சவாடிக்கு சென்று கிராம மக்கள் வாக்களித்து வந்தனர். இதனால், தங்கள் கிராமத்திலேயே வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களது கோரிக்கையை தேர்தல் ஆணையம் வழக்கம்போல் நிராகரித்துள்ளது.

இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்புக் கொடி கட்டி கிராம மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, “அய்யம்பாளையம் கிராமத்தில் 720 வாக்காளர்கள் உள்ளனர். நாங்கள் அனைவரும், 5 கி.மீ., தொலைவு சென்று சேங்கபுத்தேரி ஊராட்சியில் உள்ள வாக்குச்சாவடியில்தான் பல தலைமுறைகளாக வாக்களித்து வருகிறோம்.

சேங்கபுத்தேரி வாக்குச் சாவடிக்கு வாக்களிக்க செல்வது பல்வேறு சிரமங்களை ஏற்படுத்து கிறது. இதனால், எங்கள் கிரா மத்திலேயே வாக்குச்சாவடி அமைக்க, கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி வந்தவர்கள், இப்போது தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது என்கின்றனர். அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், எங்கள் கிராமத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருக்கும்.

வாக்குச்சவாடி மையம் அமைக்க போதிய கட்டிட வசதி இல்லை என கடந்த காலங்களில் கூறினர். இப்போது, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தில் வாக்குச்சாவடி மையம் அமைத்துக் கொடுக்க வேண்டும். 5 கி.மீ., தொலைவுள்ள சேங்கபுத்தேரி கிராமத்துக்கு செல்ல பேருந்து வசதி கிடையாது. முதியவர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வாக்களிக்க செல்லும்போது அவதிப்படுகின்றனர்.

கடந்த உள்ளாட்சித் தேர்தலில், எங்கள் கிராமத்திலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. ஆனால், சட்டப் பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு மட்டும் அமைக்கமறுக்கின்றனர். அய்யம்பாளை யம் கிராமத்திலேயே வாக்குச்சாவடி மையம் அமைக்கவில்லை என்றால் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். எங்களது கோரிக்கையை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்” என்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த கலசப்பாக்கம் வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதனால், 30 நிமிடம் நடைபெற்ற சாலை மறியல் முடிவுக்கு வந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in