

தி.மலையில் ரூ.3.94 லட்சத்தை மோசடி செய்தவர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு, லாரி ஓட்டுநரின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த குறைதீர்வு கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், ஆட்சியர் அலுவலகம் முன்பு பெட்டி வைக்கப்பட்டு, பொது மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படுகின்றன. அதில், நேற்று திங்கள் கிழமை என்பதால், மக்கள் பலரும் தங்களது மனுவை போட்டனர்.
அதன்படி, செங்கம் அடுத்த தொரப்பாடி கிராமம் பெரியேரி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சின்னராஜா என்பவரின் மனைவி பிரியா(26). இவரிடம் சத்துணவு திட்டத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ3.94 லட்சத்தை மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளார். அம்மனுவில், எனது கணவர் லாரி ஓட்டுநர். தி.மலை மாவட்ட நிர்வாகம் அறிவித்த சத்துணவு அமைப் பாளர் பணிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தேன்.
இந்நிலையில் எனது செல்போன் எண்ணுக்கு கடந்த மாதம் 14-ம் தேதி தொடர்பு கொண்டவர், தி.மலை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக அறிமுகம் செய்து கொண்டார். பின்னர் அவர், சத்துணவு அமைப்பாளர் பணிக்கு நீங்கள் விண்ணப்பித்துள்ளீர்கள். உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன். இதற்காக,ரூ.4 லட்சம் கொடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு பணம் கொடுத்து வேலை வாங்கித் தரப்படும் என உறுதி அளித்தார்.
அதன்பேரில், பிப்ரவரி 15 முதல் 22-ம் தேதி வரை 6 தவணைகளாக ரூ.3,94,700 செலுத்தினேன். பின்னர் அவரை தொடர்பு கொண்டபோது, காரில் வந்து அழைத்து சென்று ஆட்சியர் கைகளால் பணி நியமன ஆணையை பெற்றுத் தருகிறேன் என்றார். ஆனால், அவர் வரவில்லை. இதனால் நான், அவரை கடந்த 1-ம் தேதி தொடர்பு கொண்டபோது, வேலை கிடையாது என்றும், கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுத்து ரூ.3,94,700 பெற்றுத் தர ஆட்சியர் சந்தீப் நந்தூரி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.