

உலக மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கு பாத பூஜை செய்து வணங்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நேற்று நடைபெற்றது.
உழவர் பேரவை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். பெண்களின் பாதங்களில் பால் ஊற்றி கழுவி பாத பூஜை செய்து வணங்கினர். பின்னர், பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை வலியுறுத்தியும், சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் நேர்மையுடன் வாக்களிக்க வேண்டும் என உறுதிமொழி ஏற்றனர்.
இதையடுத்து புருஷோத்தமன் கூறும்போது, “கிராம பொருளாதாரத்தை மேம்படுத்த சாண எரிவாயு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு வேளாண் உற்பத்தி பொருட்களையும் மதிப்பு கூட்டு பொருளாக தயாரிக்க தேர்தல் அறிக்கையில் அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் முழு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்” என்றனர்.