Published : 08 Mar 2021 08:39 PM
Last Updated : 08 Mar 2021 08:39 PM

திமுக கூட்டணியில் ஆதித்தமிழர் பேரவை, தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலைக் கட்சிக்கு தலா ஒரு தொகுதி; உதயசூரியன் சின்னத்தில் போட்டி: ஒப்பந்தம் கையெழுத்து

திமுக கூட்டணியில் ஆதித்தமிழர் பேரவை, தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலைக் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சடட்ப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலை திமுக மெகா கூட்டணி அமைத்து எதிர்கொள்கிறது. திமுக கூட்டணியில், காங்கிரஸுக்கு 25, மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனித நேய மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆதித்தமிழர் பேரவை, தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலைக் கட்சிகளுடன் இன்று தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதன்படி, தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், ஆதித்தமிழர் பேரவை கட்சியுடனான தொகுதி உடன்பாடு குறித்து திமுக தலைவர் ஸ்டாலினும், ஆதித்தமிழர் நிறுவனர்/தலைவர் இரா.அதியமானும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ஆதித்தமிழர் பேரவை, தமிழகத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதியை பங்கிட்டுக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதெனவும் முடிவு செய்யப்பட்டது.

அதேபோல், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகனும் திமுக தலைவர் ஸ்டாலினும் தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழகத்தில் 1 (ஒன்று) சட்டமன்றத் தொகுதியை பங்கிட்டுக் கொள்வதெனவும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதெனவும் முடிவு செய்யப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் உ.கண்ணன், மாநில துணைப் பொதுச்செயலாளர் சத்திரியன் வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மக்கள் விடுதலைக் கட்சியின் நிறுவனர்/தலைவர் சு.க.முருகவேல் ராஜன் இன்று (8-3-2021) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசினார். இதில், தமிழகத்தில் 1 (ஒன்று) சட்டமன்றத் தொகுதியை பங்கிட்டுக் கொள்வதெனவும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதெனவும் முடிவு செய்யப்பட்டது.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது மக்கள் விடுதலை கட்சியின் மாநில செயல் தலைவர் அ.அபிசுரேஷ், மாநில பொதுச்செயலாளர்கள் அ.இரவி, இரா.செல்வகுமார், மாநில அமைப்புச் செயலாளர் மு.சரவணகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திமுக கூட்டணியில் கிட்டத்தட்ட தொகுதி உடன்பாடு ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ள நிலையில், கொங்கு மக்கள் தேசிய கட்சியுடன் மட்டும் இன்னும் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x