Published : 08 Mar 2021 09:06 PM
Last Updated : 08 Mar 2021 09:06 PM

16 மணி நேரம் தொடர் தேர்தல் பணி: மதுரையில் பணிபுரியும் வீடியோ சர்வைலன்ஸ் டீம் வாகன ஓட்டுநர்கள் அதிருப்தி

மதுரை

தேர்தல் அறிவித்துவிட்டாலே பல்வேறு அரசுத் துறையின் வாகனங்களை தேர்தல் பணிக்காக உபயோகப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் தற்போது தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மதுரை மாவட்டத்தில் அனைத்து அரசுத்துறை வாகனங்களும் தேர்தல் ஆணையக் கட்டுப்பாட்டின் கீழ் மதுரை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான அன்பழகன் உத்தரவுப்படி தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.

இந்த வாகனங்கள், முறையற்ற பரிமாற்றங்களை கண்காணிக்கும் பறக்கும்படை (Flaying squad), நிலையான கண்காணிப்பு குழு (Static survial once Team), வேட்பாளர்கள் அனைத்து செலவினங்களையும் வீடியோ ஆய்வு செய்யும் குழு (Video Survial ance Team) போன்றவற்றிற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில் FST, SST போன்ற படைகளில் பணிபுரியும் பிரிவிற்கு 3 ஷிப்டுகள் பணி (6 AM To 2 PM, 2 PM 10 pm, 10 PM To 6. AM,) என்ற அடிப்படையில் பணிகள் உள்ளன.

ஆனால் VST பிரிவில் பணிபுரியும் ஊர்தி ஓட்டுனர்களுக்கு மட்டும் காலை 6.00 மணி முதல் இரவு 10.30 மணி வரை சுமார் 16 மணி நேரம் தொடர்ந்து பணியபுரிய வேண்டிய நிலை உள்ளது.

இதுகுறித்து அத்துறை வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:

தொகுதிக்கு ஒரு வாகனம் என்ற அடிப்படையில் மதுரையின் 10 தொகுதிகளுக்கும் சேர்த்து வேட்பாளர்கள் செலவினங்களை ஆய்வு செய்யும் வீடியோ ஆய்வு செய்யும் குழுவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

ஒரு தொகுதிக்கு ஒரு வாகனம் என்றால் எந்த அடிப்படையில் பணி செய்ய இயலும்?. மதுரை மாவட்டத்தில் மற்ற பிரிவிற்க்கு 60 வாகனங்கள் ஒதுக்கப்பட்டு 3 ஷிப்டுகள் என்ற அடிப்படையில் ஊர்தி ஓட்டுநர்கள் ஷிப்ட் அடிப்படையில் பணி புரிவதால் அவர்களுக்கு பணிச்சுமை இல்லை.

ஆனால் VST படையில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் காலை 6 மணி முதல் இரவு 10.30 மணி வரை பணி வழங்கப்படுவதால் ஊர்தி ஓட்டுநர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். தற்போது தேர்தல் பணி அதிகமாக இல்லை.

ஆனால் வரும் நாட்களில் வேட்பு மனு தாக்கல் ஆரம்பித்து விட்டால் எப்போது பணி முடிந்து வீட்டிற்கு செல்வோம் என்பதே தெரியாது. இதில் மறுநாள் காலை 6 மணிக்கே மீண்டும் பணிக்கு வர வேண்டும் என்றால் எப்படி இயலும்?. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டும் எந்த பதிலும் இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x