

தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் 8 பெண் வேட்பாளர்கள்; 4 சிறுபான்மையினருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: இரண்டு நாட்களில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் தெரிந்துவிடும்.
நாடாளுமன்றத் தேர்தலைப் போன்று திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். காங்கிரஸ் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெறும்.
மூன்றாவது அணிக்கு பிரதான கட்சிகளின் மீதான வருத்தத்தில் இருப்பவர்களின் வாக்குகள் மட்டுமே விழும். மூன்றாவது அணி தேர்தல் சமயத்தில் மட்டுமே வரும். நிலைத்து நின்று தொடர்ந்து ஆக்கபூர்வமான அரசியலில் ஈடுபடாது.
தேர்தலுக்குப் பிறகு காணாமல் போய்விடும். அவர்கள் பெறும் வாக்குகள் சூப்பர் நோட்டாவாக தான் இருக்கும். தேர்தல் வந்ததால் பிரதமர் மோடிக்கு வங்காளிகள் மீது தாடி பற்றும், தமிழகத்தின் மீது மொழிப்பற்றும் ஏற்பட்டுள்ளது.
பாஜகவிற்கு அடிமட்டத் தொண்டர்கள் இல்லாததால் அதிகார பலம் மூலம் மற்ற கட்சியில் இருந்து ஆட்களை இழுக்கின்றனர். மக்களை சந்தித்து பிரதிநிதித்துவ அரசியல் செய்வது கிடையாது. தமிழகத்தில் அவர்களுக்கு ஒரு எம்பி, எம்எல்ஏ இல்லை.
காங்கிரஸில் இருந்து யார் வேறு கட்சிக்குப் போனாலும் எனக்கு வருத்தம் தான். அவர்களை தமிழக மக்கள் விரும்பவில்லை. இந்தத் தேர்தலில் காங்கிரஸில் பெண்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் 8 பெண் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். மேலும் சிறுபான்மையினரில் 4 பேருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும், என்று கூறினார்