Published : 08 Mar 2021 07:32 PM
Last Updated : 08 Mar 2021 07:32 PM

சென்னையின் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குச்சாவடிகள் குலுக்கல் முறையில் தேர்வு

சென்னை

சென்னை மாவட்டத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்( EVM-Machine) முதல் கட்டமாக கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

''இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ளும் விவிபேட் (VVPAT) கருவிகள் ஆகியவற்றைக் கணினி மூலம் முதல்நிலைத் தேர்வு செய்தல் (1st level Randomization) ரிப்பன் மாளிகையில் மாவட்டத் தேர்தல் அலுவலர் பிரகாஷ் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் நடைபெற்றது.

சென்னை மாவட்டத்தில் 5,911 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 2,157 துணை வாக்குச்சாவடிகளும் அடங்கும். வாக்குப்பதிவுக்குப் பயன்படுத்த உள்ள 7,098 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 7,098 கட்டுப்பாட்டுக் கருவிகள், 7,454 விவிபேட் (VVPAT) இயந்திரங்களில் முதற்கட்டமாக எந்தெந்த சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு எந்தெந்த இயந்திரங்கள் எனக் கணினி மூலம் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியின்போது தெரிவு செய்த வாக்குப்பதிவு இயந்திரங்களின் விவரங்கள் மின்னஞ்சல் வழியாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கூடுதல் மாவட்டத் தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி, கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/துணை ஆணையர் (வருவாய்) மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் பெர்மி வித்யா மற்றும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்''.

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x