நெல்லையில் வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு

நெல்லையில் வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர், போலீஸ் அதிகாரிகள் ஆய்வு
Updated on
2 min read

திருநெல்வேலியில் வாக்கு எண்ணும் மையமான அரசு பொறியியல் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான வே. விஷ்ணு மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

திருநெல்வேலி, நாங்குநேரி தொகுதிகளுக்கு மெயின் வளாகத்திலும், அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, ராதாபுரம் தொகுதிகளுக்கு தனித்தனி வளாகங்களிலும் வாக்கு எண்ணிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அறைகள், வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்கும் அறைகள் உள்ளிட்டவற்றை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான வே. விஷ்ணு, மாநகர காவல் ஆணையர் அன்பு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் விஷ்ணு கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு வாக்குச் சாவடிக்கு 1050 வாக்காளர்கள் என்ற அடிப்படையில் 1924 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 309 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை. வாக்குப்பதிவுக்கு 3229 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 2416 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 2563 விவிபாட் இயந்திரங்களும் முதற்கட்ட ஆய்வுக்குப்பின் தயார் நிலையில் உள்ளன. இவற்றை எடுத்து செல்ல 157 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கு கூடுதல் இயந்திரங்கள் தேவைப்பட்டால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு வாக்களிக்க விருப்பம் உள்ளவர்கள் தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட நாளில் இருந்து 5 நாட்களுக்குள் படிவத்தை திருப்பியளிக்க வேண்டும். இதற்கான படிவம் வாக்குச் சாவடி நிலைய அலுவலர்கள் மூலம் வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கப்படும்.

தலைவர்களின் படங்கள் இருப்பது குறித்து புகார்கள் வந்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆதிதிராவிடர் நலத்துறையில் பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டது. இதனால் தேர்தல் விதிகள் மீறப்படவில்லை.

மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக இதுவரை 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 29 மதுபாட்டில்கள், 64 வேட்டிகள், 7.700 கிராம் வெள்ளி, ரூ.1.25 லட்சம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் 1950 என்ற எண்ணுக்கு இதுவரை 372 அழைப்புகள் வரப்பெற்றுள்ளன. 13,431 சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், பதாகைகள் அகற்றப்பட்டுள்ளன என்று ஆட்சியர் தெரிவித்தார்.

மாநகர காவல் ஆணையர் அன்பு கூறும்போது, திருநெல்வேலி மாநகரில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக பாரபட்சமின்றி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வருகையின்போது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதுபோல் பாஜக பரச்சாரத்தின்போதும் விதிமீறல் தொடர்பாக ஒரு வழக்கு பதிவாகியுள்ளது என்று தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் கூறும்போது, திருநெல்வேலி மாவட்டத்துக்கு ஏற்கெனவே ஒரு கம்பெனி மத்திய படை வந்துள்ளது. கூடுதலாக ஒரு கம்பெனி மத்திய படையினர் வரவுள்ளனர். பறக்கும்படை சோதனைகள், நிலையான கண்காணிப்பு குழுக்களுடன் இணைந்து ஆய்வில் ஈடுபடுத்தப்படுவார்கள். வேட்பு மனுத்தாக்கலின்போதும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்தார்.

மாநகர காவல் துணை ஆணையர்கள் சீனிவாசன், மகேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், சார் ஆட்சியர்கள் சிவகிருஷ்ணமூர்த்தி, பிரதீக் தயாள் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in