Published : 08 Mar 2021 05:49 PM
Last Updated : 08 Mar 2021 05:49 PM

காங்கிரஸுக்கு 25 இடங்கள் கிடைத்ததில் மகா திருப்தி; கூடுதல் இடங்கள் வாங்கித் தோற்பது நல்லதில்லை: மணிசங்கர் அய்யர் கருத்து

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 25 இடங்கள் கிடைத்திருப்பதில் மகா திருப்தி என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கருத்து தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையின்போது தொகுதி எண்ணிக்கையில் ஏற்பட்ட மாறுபட்ட கருத்து காரணமாகத் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. காங்கிரஸ் கட்சிக்கு 18 தொகுதிகளுக்கு மேல் தருவதில்லை என்பதில் திமுக பிடிவாதம் காட்டியதால் தொடர்ந்து இழுபறி நீடித்தது. 54 தொகுதிகளை காங்கிரஸ் கேட்க 18 தொகுதிகள் என திமுக நிற்க, பேச்சுவார்த்தை இழுபறியானது. இதனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்கிற கேள்வி எழுந்தது.

மூன்றாவது அணிக்கு காங்கிரஸ் போவது குறித்தும் பேசப்பட்ட நிலையில் மார்ச் 6-ம் தேதி தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டப்பேரவைத் தொகுதிகளும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர், காங்கிரஸுக்கு 25 இடங்கள் கிடைத்திருப்பது மகா திருப்தி என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ''சந்தேகமே இல்லை. திமுக தலைமையிலான கூட்டணிக்குத்தான் வெற்றி உறுதி. காங்கிரஸுக்கு 25 இடங்கள் கிடைத்துள்ளன. இதில் எனக்கு மகா திருப்தி. கூடுதல் இடங்கள் வாங்கி அதிக இடங்களில் தோற்றுப்போவது நல்லதில்லை. அதில் நமக்கு எந்தவிதமான பெருமையும் கிடைக்கப் போவதில்லை.

இப்போது 25 தொகுதிகளில் போட்டி என்று தீர்மானித்துவிட்டோம். அதில் 15-ல் இருந்து 20 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதும். அதுவே பெருமைப்படத்தக்க விஷயம். அதற்கு முன்னதாக யாரால் வெற்றி அடைய முடியுமோ அந்த வேட்பாளர்களை மட்டும் நாம் தேர்வு செய்து நிற்க வைக்க வேண்டும்'' என்று மணிசங்கர் அய்யர் தெரிவித்தார்.

பாஜகவின் கரங்களை காங்கிரஸில் இருந்து சென்றவர்களே வலுப்படுத்துகிறார்களே என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, ''அரசியலில் எந்தக் கட்சியாக இருந்தாலும் சந்தர்ப்பவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் ஜெயிக்கின்ற கட்சிக்குச் செல்கிறார்கள். 'என் சீட் எனக்கு முக்கியம்; அமைச்சர் பதவி வேண்டும்' என்று நினைக்கிறார்கள். எந்தக் கட்சியில் சீட் கிடைக்கிறதோ அங்கு போய் இணைகிறார்கள். அத்தகையோர்தான் காங்கிரஸை விட்டு அங்கும் இங்கும் செல்கிறார்கள்'' என்று மணிசங்கர் அய்யர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x