Published : 08 Mar 2021 04:51 PM
Last Updated : 08 Mar 2021 04:51 PM

யாரையாவது ஏமாற்ற வேண்டுமென்றால் ஸ்டாலினிடம் இருந்துதான் கற்க வேண்டும்: எல்.முருகன் விமர்சனம்

யாரையாவது ஏமாற்ற வேண்டுமென்றால் ஸ்டாலினிடம் இருந்துதான் கற்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். எந்தெந்தத் திட்டங்களை ஏற்கெனவே மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறதோ, அதைத்தான் திமுக தொலைநோக்குத் திட்டமாக அறிவித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தின் 'விடியலுக்கான முழக்கம்' என்ற பெயரில் திமுகவின் பிரம்மாண்ட தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம் திருச்சி - சென்னை பைபாஸ் சாலையில் சிறுகனூரில் நேற்று நடைபெற்றது. தமிழகத்தின் பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்பு, சமூக நீதி ஆகியவற்றை மேம்படுத்த ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள் என்ற தலைப்பில் தொலைநோக்குத் திட்டத்தை ஸ்டாலின் வெளியிட்டார். இந்த அறிவிப்புகள் ஏமாற்று வேலை என்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் சென்னை, கோயம்பேட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

''திருத்தப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார்கள். என் தோட்டத்தில் விளையும் காய்களுக்கு ஏன் விலை நிர்ணயிக்கக் கூடாது, ஏழை விவசாயிகள் பலன் அடையக்கூடாது என்ற கெட்ட எண்ணத்தில் பந்த் நடத்தியவர்தான் ஸ்டாலின். ஆனால் இன்று போலியாக விவசாயிகளுக்கு இரட்டை லாபம் கிடைக்கச் செய்வேன் என்கிறார்.

யாரையாவது ஏமாற்ற வேண்டுமென்றால் நாம் திமுகவிடம் இருந்துதான் கற்க வேண்டும். குறிப்பாக ஸ்டாலினிடம் இருந்துதான் ஏமாற்றக் கற்றுக்கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுக்கப்படும் என்றார்களே, ஸ்டாலின் கொடுத்தாரா?

விவசாயிகளின் நிலத்தை ஆக்கிரமிக்க மாட்டோம் என்று உங்களால் (திமுக) உறுதி கொடுக்க முடியுமா? திமுக தொலைநோக்குத் திட்ட அறிவிப்புகள் ஏமாற்று வேலை. குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை அளிக்கப்படும் என்று திமுக தலைவர் கூறியுள்ளார். அவர் எப்படிக் கொடுப்பார்? பொறுத்திருந்து பார்க்கலாம். ஏற்கெனவே உள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை, திமுக எழில்மிகு மாநகர் திட்டம் என்று அறிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் மோடி, மத்திய அரசு 1 ரூபாய் கொடுத்தால் 16 காசுகள்தான் பயனாளிகளுக்குக் கிடைக்கிறது என்றார். ஆனால் மோடி தலைமையிலான அரசு 1.1 கோடி பேருக்கு இலவச வங்கிக் கணக்கைத் தொடங்கி வைத்துள்ளது. பெண்களுக்கு 31.6 லட்சம் பேருக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கப்பட்டது. 6 வருடங்களில் 91.68 லட்சம் பேருக்கு இலவசக் கழிப்பறை, விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை, முத்ரா வங்கித் திட்டங்கள் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஏற்கெனவே எந்தெந்தத் திட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறதோ, அதைத்தான் திமுக தொலைநோக்குத் திட்டமாக அறிவித்துள்ளது. இதன்மூலம், மக்களை ஏமாற்ற ஸ்டாலின் முயற்சி செய்கிறார்''.

இவ்வாறு எல்.முருகன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x