வீடியோ காலில் பேசிய அமித் ஷா; கூட்டணி பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை- ரங்கசாமி தகவல்

வீடியோ காலில் பேசிய அமித் ஷா; கூட்டணி பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை- ரங்கசாமி தகவல்
Updated on
1 min read

கூட்டணிக்குள் என்.ஆர்.காங்கிரஸை இழுக்க பாஜக பணிகளை மும்முரப்படுத்தியுள்ள நிலையில், அப்பா பைத்தியம் சாமி கோயிலுக்கு ரங்கசாமி இன்று வந்தபோது வீடியோ காலில் அமித் ஷா பேசியுள்ளார். அதே நேரத்தில் கூட்டணி பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்தார்.

புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் இருப்பது உறுதியாகியுள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வரப் பல முயற்சிகளை பாஜக எடுத்துள்ளது. மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால், பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, மாநிலத் தலைவர் சாமிநாதன் உள்ளிட்டோர் ரங்கசாமியிடம் பலமுறை பேசியும் தொடர்ந்து ரங்கசாமி மவுனமாகவே உள்ளார். கூட்டணி பற்றி அவர் வாய் திறக்கவே இல்லை.

"பார்க்கலாம்", "சொல்கிறேன்" என்று ஓரிரு வார்த்தைகளை மட்டுமே ரங்கசாமி தொடர்ந்து சொல்வதாக, மேலிடத்துக்குத் தெரிவித்துள்ளனர். கூட்டணிக்குள் என்.ஆர்.காங்கிரஸை இழுப்பதில் தொடர் சிக்கல் நிலவி வருவதையும் கட்சி மேலிடத்துக்கு பாஜகவினர் தெரிவித்தனர். இதையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை பாஜக எடுக்கத் தொடங்கியுள்ளது. என்.ஆர்.காங்கிரஸைக் கூட்டணிக்குள் கொண்டு வர தமிழ் மற்றும் இந்தி தெரிந்த ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகளைக் கொண்டு பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இது தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரங்களில் கூறுகையில், "அப்பா பைத்தியம் சாமி கோயிலுக்கு இன்று ரங்கசாமி வந்தபோது ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் வீடியோ கால் செய்தனர். அதையடுத்து அமித் ஷாவும், ரங்கசாமியும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளின் துணையுடன் பேசினர்" என்றனர்.

இதைத் தொடர்ந்து ரங்கசாமி வழக்கமாக அவர் இருக்கும் நேரு வீதி கடிகாரக் கடையில் அமர்ந்திருந்தார். அவரைச் சந்தித்து 'இந்து தமிழ்' இணையதளம் சார்பில் பேசினோம்.

தேர்தல் நேரத்தில் தொடர்ந்து ஆன்மிகப் பயணம் ஏன்?

தொடர்ந்து ஆன்மிகப் பயணம் செல்வது வழக்கம். மிகவும் பிடிக்கும்.

அமித் ஷா தங்களுடன் வீடியோ காலில் பேசினாரா?

ஆமாம் (தலையாட்டினார்).

எதுவும் முடிவு எடுத்துள்ளீர்களா?

சொல்கிறேன்.

எப்போது டெல்லி செல்ல உள்ளீர்கள்?

இப்போது டெல்லி செல்லும் எண்ணமில்லை.

கூட்டணி பற்றி முடிவு எடுத்து விட்டீர்களா?

இன்னும் முடிவு எடுக்கவில்லை.

இவ்வாறு ரங்கசாமி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in