

சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்த நேரத்திலும், பெண் அரசியல் தலைவர்கள் சமூக வலைதளங்களில் பாலின ரீதியிலான தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்கள் மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் டிஜிட்டல் யுகத்தில் புற்றீசலாக வளர்ந்து கொண்டிருக்கின்றன. அரசியல் களத்தில் ஏற்படும் பிரச்சினைகளைச் சமாளிக்கும் அதே நேரத்தில், இத்தகைய சமூக வலைதளத் தாக்குதல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
சமூக வலைதளங்கள் மட்டுமின்றி, நேரடியாகவும் அவர்கள் சந்திக்கும் கேள்விகள், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையே மையமாகக் கொண்டிருக்கின்றன. உருவ கேலி, அணியும் உடைகள் தொடங்கி அவர்களின் திருமண வாழ்க்கை வரை பெண் அரசியல்வாதிகளின் சித்தரிப்பு, தனிப்பட்ட வாழ்க்கையையே பெரும்பாலான இடங்களில் மையமாகக் கொண்டுள்ளது.
2019 மக்களவைத் தேர்தலின்போது 95 பெண் அரசியல்வாதிகள் மீது, மார்ச் - மே ஆகிய காலகட்டத்தில் அவர்களைத் தாக்கும் ரீதியிலான 10 லட்சம் ட்விட்டுகள் ட்விட்டரில் பதிவானதாக, 'ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல்' புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இப்பெண்களை நோக்கித் தொடுக்கப்பட்ட 7 ட்வீட்களில் ஒரு ட்வீட், ஆணாதிக்கம் நிறைந்ததாகவும், பாலினப் பாகுபாடு கொண்டதாகவும் இருந்ததாக அந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
பல பெண் தலைவர்கள் இத்தகைய தனிப்பட்ட விமர்சனங்களுக்கு சற்றும் யோசிக்காமல் காத்திரமான எதிர்வினைகளை அளிக்கத் தயங்குவதில்லை.
மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, தனியார் தொலைக்காட்சி ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில், "நீங்கள் சமைப்பீர்களா?" என நெறியாளர் கேட்டபோது, "ஏன் அந்தக் கேள்வியை பெண் அரசியல்வாதிகளை மட்டும் நோக்கி எழுப்புகிறீர்கள்? என் தந்தை முதல்வராகவே இருந்திருக்கிறார். அவரை நோக்கி எழுப்பியதில்லையே" என மறுகேள்வி எழுப்பினார்.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற 'பெண் டூ பாலிட்டிக்ஸ்' (Penn and politics) விவாத நிகழ்வில், மக்களவை திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், "நான் ஏன் பூ, ஜிமிக்கி, கண்ணாடி வளையல்களை அணிகிறேன், ஏன் இன்னும் இப்படி உடை அணிகிறேன்' என என்னிடம் கேட்பார்கள். அதற்கு, நான் கிராமத்தில் வளர்ந்த பெண். இப்படி உடை அணியத்தான் எனக்குப் பிடிக்கும். நான் என்ன அணிய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க அவர்கள் யார்? எனக் கேட்பேன்" எனப் பேசினார்.
இப்படி ஒவ்வொரு பெண் அரசியல்வாதியின் தனிப்பட்ட குணநலன்கள், ஆடைகள் மீதான கேள்விகளும் விமர்சனங்களும் தரக்குறைவான வார்த்தைகளின் மூலம் சமூக வலைதளங்களிலும் நேரடியாகவும் தொடுக்கப்பட்டு வருகின்றன.
அப்படித் தாக்குதல்களை எதிர்கொண்டுவரும் அரசியல் தலைவர்களிடம், அதனை எப்படி அவர்கள் எதிர்கொள்கிறார்கள், இதனை எப்படி மட்டுப்படுத்துவது என்ற கேள்விகளை எழுப்பினோம்.
"அறிவு சார்ந்து மட்டுமே பெண்கள் அறியப்பட வேண்டும்"
"மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த பெண் தலைவர்களை உருவ கேலி செய்கிறபோது நானே எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கிறேன். ஜெயலலிதாவை விமர்சிக்கும்போது நானும் கனிமொழியும் குரல் கொடுத்திருக்கிறோம்.
வெளிநாடுகளில் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அவர்களின் பொது வாழ்க்கையுடன் ஒப்பிட மாட்டார்கள். இரண்டும் வெவ்வேறானது.
அறிவு சார்ந்து மட்டுமே பெண்கள் அறியப்பட வேண்டும் என்பதற்காகத்தான் சுயமரியாதை இயக்கப் பெண்களை நாங்கள் முன்னிறுத்துகிறோம். பெண்களை இழிவுபடுத்தக் கூடாது என திமுகவில் உள்ள இளைஞர்களுக்குச் சொல்கிறோம். மீறி இழிவாக விமர்சிப்பவர்களைத் தலைவரே நேரடியாகக் கண்டித்திருக்கிறார். திமுகவில் இளைஞர்களுக்காகத் தொடர்ந்து இதுகுறித்து அறிவூட்ட பயிற்சிப் பட்டறை நடத்தப்படுகிறது.
ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் தரக்குறைவான விமர்சனங்களில் ஈடுபடுவது பெரிய முரண். நம் மீதே நாம் உமிழ்நீரை உமிழ்ந்து கொள்கிறோம் என்ற புரிதல் பெண்களுக்கு இருக்க வேண்டும். வளர்ப்பு முறையிலிருந்து கவனம் செலுத்த வேண்டிய விஷயம் இது" என்கிறார், திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன்.
"அவர்களைத் தோலுரித்துக் காட்ட வேண்டும்"
"பெண்களுக்கு எதிராக இருக்கும் ஒரு வக்கிரமான மனநிலையின் வெளிப்பாடுதான் தனிப்பட்ட விமர்சனங்கள். இதைக் காலங்காலமாக எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆணாதிக்கத்தை மட்டுமல்ல, வக்கிரத்தையும் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பாஜக இதனை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி எதிர்க்குரல் எழுப்புபவர்கள் மீது இதனைப் பயன்படுத்துகிறது. இந்தியச் சமூகத்தில் இருக்கக்கூடிய பிரச்சினைகளைத் தணிக்கும் வேலைகளைப் பார்க்காமல், அதனைக் கூர்தீட்டும் வேலைகளில் பாஜக ஈடுபடுகிறது. இது திட்டமிடப்பட்ட தாக்குதல். என் போன்றவர்கள் இதனைத்தான் எதிர்கொள்கிறோம். வழக்கமான தாக்குதலையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
இதனால் பெண்கள் பின்வாங்கிவிடுவார்கள் என்ற மனநிலையில்தான் இந்தத் தாக்குதலைத் தொடுக்கின்றனர். ஆனால், அது அந்தக் காலம், இப்போது அப்படியில்லை. யாராவது அப்படித் தரம் தாழ்ந்து பேசினால், அது அவர்களின் தராதரத்தைத்தான் பிரதிபலிக்கிறது. இதற்கு நாம் அவமானப்படக் கூடாது. இதைச் செய்பவர்கள்தான் அவமானப்பட வேண்டும்.
இதற்குப் பின்னால் இருப்பவர்களை வெளிக்கொண்டு வந்து கேள்வி கேட்க வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் நான் அவர்களை எதிர்கொண்டு தோலுரித்துக் காட்டுகிறேன்" என்கிறார், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி.
"பின்வாங்காமல் எதிர்கொள்ள வேண்டும்"
"அரசியலுக்கு வரும் பெண்களைத் தனிப்பட்ட ரீதியாக விமர்சிப்பவர்கள் இருக்கின்றனர். அதற்கு அப்பாற்பட்டு அதனை எதிர்கொள்ளக்கூடிய சக்தியை நாம் வரவழைத்துக்கொள்ள வேண்டும். இந்த விமர்சனங்களுக்கு பயந்து நாம் உட்கார்ந்துவிடக் கூடாது. சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்த பின்புதான் இது அதிகமாகியிருக்கிறது.
5-6 ஆண்டுகளாகத்தான் இந்த மோசமான நிலை இருக்கிறது. பெண்கள் தனியாக அத்தகைய விமர்சனங்களை எதிர்கொள்ளும் அளவுக்கு தமிழகம் வளர்ந்துவிட்டது" எனக் கூறுகிறார், முன்னாள் அதிமுக அமைச்சரும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான வளர்மதி.
"பெண்களுக்குச் சம மரியாதை கொடுக்க வேண்டும்"
"பெண்களுக்குச் சம மரியாதை கொடுக்க வேண்டும் என்று ஆண்களுக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை. கருத்து சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது என்ற எண்ணம் சமூக வலைதளங்களில் அதிகரித்துள்ளது. அவர்கள் முகம் தெரியாத கோழைகள். கட்சி ரீதியாக விமர்சிப்பார்கள். ஒரு பெண்ணை அவர்களால் வேறு எந்த விதத்திலும் விமர்சிக்க முடியாது. குணநலன்களை விமர்சிப்பார்கள். இப்படித்தான் நடந்திருக்கிறது என அவர்களே எண்ணிக்கொள்வார்கள். அவர்களுக்கு முக்கியத்துவமே கொடுக்கக் கூடாது. அளவுக்கு மீறினால் புகார் அளிக்க வேண்டும்.
நாம் பதில் கொடுத்தால் அவர்கள் இன்னும் தாக்குதல் கொடுப்பார்கள். ஒரு உடனடி பிரபலத்துக்காக அவர்கள் இதனைச் செய்கிறார்கள். நிச்சயமாக நான் இதனால் சோர்ந்தது கிடையாது. என்னை ட்ரோல் செய்பவர்கள் 99.9% மாற்றுக் கட்சியினரைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். நான் அவற்றைப் புறக்கணித்துவிடுவேன். என்னுடைய நேரம் எனக்கு முக்கியமானது. தரக்குறைவாக மாற்றுக்கட்சி பெண்களை விமர்சிப்பவர்கள் மீது கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார், பாஜக தேர்தல் பொறுப்பாளர் குஷ்பு.
தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in