Published : 08 Mar 2021 01:51 PM
Last Updated : 08 Mar 2021 01:51 PM

திமுக ஆட்சி அமைந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு: பண்ருட்டி வேல்முருகன் பேட்டி

சென்னை

திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது. தொகுதி எண்ணிக்கை குறித்துக் கோரிக்கை வைத்துள்ளோம். எத்தனை இடங்கள் கொடுத்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வோம் என பண்ருட்டி வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் அனைத்துப் பெரிய கட்சிகளின் தொகுதிப் பங்கீடும் உடன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், எஞ்சிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தொகுதிப் பங்கீடும் இன்று மாலை உறுதியாகிவிடும் எனத் தெரிகிறது. இந்நிலையில் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரியும் திமுகவுகு ஆதரவு தெரிவித்துக் கடிதம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இன்று அண்ணா அறிவாலயம் வந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் திமுக பேச்சுவார்த்தைக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் வெளியில் வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பாஜக அரசும், அவர்களுடன் இணைந்து செயல்படுகிற அதிமுக அரசும் தொடர்ந்து தமிழகத்திற்கு மக்கள் விரோத திட்டங்களையும், சட்டங்களையும் கொண்டுவந்து தமிழ்நாட்டையே சுடுகாடாக மாற்றிக் கொண்டிருக்கின்றன.

ஆகவே, இந்த அரசு அகற்றப்படவேண்டும். பாஜக தமிழகத்தில் எந்தவிதத்திலும் அரசியல் அதிகாரம் பெற்றுவிடக்கூடாது. திமுக கூட்டணி மகத்தான வெற்றிபெற வேண்டும்.

திமுகவிடம் எத்தனை தொகுதிகள் கேட்டுள்ளீர்கள்?

எத்தனை தொகுதி வேண்டும் என்பதைக் குழுவிடம் அளித்துள்ளேன். அதில் எத்தனை தொகுதி அளித்தாலும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு திமுக ஆட்சிக்கு வரவேண்டும், ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும், பாசிச பாஜக காலூன்ற விடக்கூடாது என்கிற கொள்கை அடிப்படையில் எங்கள் பயணம் தொடர்கிறது. ஏற்கெனவே மக்களவைத் தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் ஆதரவு அளித்துள்ளோம். இந்த முறையும் கூட்டணியில் இடம்பெற்று எங்களுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கினாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வோம்.

அதிமுக-பாமகவுக்கு எதிராக என்ன மாதிரியான பிரச்சாரம் செய்ய உள்ளீர்கள்?

இன்றைக்கு தமிழகத்தில் நீட் தொடங்கி எட்டுவழிச்சாலை உள்ளிட்ட ஒவ்வொரு திட்டமும் தமிழ்ச் சமுதாயத்திற்கு எதிரான அக்கிரமமான ஒன்றாக உள்ளது. அதைப் பட்டிதொட்டி எங்கும் எடுத்துச் செல்வோம். மக்களுக்கான பல கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகச் சொன்ன அதிமுக எதுவுமே செய்யவில்லை. அந்த அதிமுகவை பாமக ஆதரிக்கிறது. இதைப் பிரச்சாரத்தில் கொண்டுசெல்வோம்.

உங்கள் அடுத்த திட்டம் என்ன?

இன்று மாலை திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து உடன்படிக்கை கையெழுத்தாகும். எங்களுக்கான வெற்றி வாய்ப்பு தொகுதிகளைக் குழுவிடம் அளித்துள்ளோம். அவர்கள் எந்தத் தொகுதி, எத்தனை இடம் அளித்தாலும் ஏற்றுக்கொள்வோம்.

10.5% வன்னியர் இட ஒதுக்கீடு அதிமுகவுக்குச் சாதகமாக அமையுமா?

10.5% இட ஒதுக்கீடு வட தமிழ்நாட்டில் ஏற்கெனவே கிடைத்து வந்த இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்கின்ற அல்லது பாதிப்பு ஏற்படுத்தும் விதமாகத்தான் உள்ளது. ஆதலால், அது போதுமானதல்ல. அனைத்து சாதிகளையும் கணக்கெடுத்து, சாவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் அந்தந்த சாதிகளுக்கு ஏற்றவாறு சமூக நீதி வழங்கினால்தான் வன்னிய இனமோ, பிற இனமோ உள்ளுக்குள் முரண்பாடு ஏற்படாமல் அமைதியாக வாழ முடியும்.

திமுக ஆட்சி அமைந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டும். அனைத்து சாதிகளுக்கும் சம நீதி வழங்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை.

என்ன சின்னத்தில் போட்டியிடப் போகிறீர்கள்?

திமுக தலைமையிலான கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்.

இவ்வாறு பண்ருட்டி வேல்முருகன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x