உண்மையான தர்ம யுத்தம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது: டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்: கோப்புப்படம்
டிடிவி தினகரன்: கோப்புப்படம்
Updated on
1 min read

உண்மையான தர்ம யுத்தம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது என, அமமுக பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்.6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளைத் தவிர்த்து, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக எனப் பல முனைகளாக இந்தத் தேர்தலில் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், அமமுக சார்பாகத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று (மார்ச் 8) சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சித் தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற்று வருகிறது.

முன்னதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அதிமுக, அமமுக வாக்குகள் பிரிந்து திமுக வெற்றிக்கு வழி அமைக்காதா?

ஜெயலலிதா அட்சியைத் தமிழகத்தில் அமைக்க அமமுக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது. அதனால் மற்ற கட்சிகள் குறித்து நான் பேச விரும்பவில்லை. வெற்றியைப் பெறுவோம் என்ற நம்பிக்கையில் தேர்தலில் போட்டியிடுகிறோம். வாக்குகள் சிதறாது என்ற நம்பிக்கையிலும், தமிழக மக்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையிலும் இந்தத் தேர்தலில் நாங்கள் போட்டியிடுகிறோம்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுக்கு இந்தத் தேர்தலில் வாய்ப்பளிப்பீர்களா?

அவர்கள் அனைவரும் ஆட்சி மன்றக்குழுவில் இருக்கின்றனர். அவர்களுக்காகத்தான் இந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. அதில் யார், யார் தேர்தலில் நிற்பார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். சிறிது நாட்களில் உங்களுக்கும் தெரியும். வதந்திகள், அவதூறுகள், பொய்த் தகவல்கள் எல்லாம் வரும். அவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். டெல்டா பகுதியில் அமமுகவினரிடம் முக்கியமானவர் ஒருவர் பொய்த் தகவலைப் பரப்பிக் கொண்டிருக்கிறார். அவர்களுக்கு சீட் தருகிறோம், ஆனால், டிடிவி தினகரன்தான் வேண்டாம் என்று சொல்வதாகப் பொய்த் தகவலைப் பரப்புகின்றனர்.

உண்மையான தர்ம யுத்தம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. எங்கள் பக்கம் தர்மம் இருக்கிறது. அதனால் மக்கள் எங்களை ஆதரிப்பார்கள்.

புதிய தமிழகம் கட்சி சார்பில் உங்களிடம் கூட்டணிக்குப் பேசினார்களா?

நான் எந்தெந்த கட்சிகளிடம் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதையெல்லாம் சொல்ல முடியாது. இன்னும் இரண்டு நாட்களாகும்.

இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in