Published : 08 Mar 2021 03:56 AM
Last Updated : 08 Mar 2021 03:56 AM

பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை தமிழகத்தில் செயல்படுத்துவோம்: பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உறுதி

மத்திய அரசு கொண்டு வந்த பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை தமிழகத்தில் கண்டிப்பாக செயல்படுத்துவோம் என்று பாஜகமூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துமாறு தமிழக அரசை வலியுறுத்தி பிராமணர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை மயிலாப்பூரில் நேற்று மாலை பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசியதாவது:

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீதஇடஒதுக்கீட்டால் எந்த சமுதாயத்துக்கும் பாதிப்பு இல்லை. அதனால்தான் நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்ட போது யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. 3 சதவீதத்தினருக்கு 10 சதவீதம் கொடுப்பதா என்று திகவும், திமுகவும்கேட்கின்றன. ஒரு பொய்யை மெய் போல் சொல்கின்றனர். உண்மையில், 10 சதவீத இடஒதுக்கீட்டில் 67 சமுதாயங்களை உள்ளடக்கிய 17 சதவீதம் பேர் உள்ளனர். இதுபற்றி திமுகவுடன் நான் விவாதிக்கத் தயார். மு.க.ஸ்டாலின் விவாதத்துக்கு தயாரா, அவர் துண்டுச்சீட்டு மட்டுமல்ல, புத்தக்கத்தை வேண்டுமானாலும் எடுத்து வரட்டும். நான் ஒன்றும் இல்லாமல் விவாதத்துக்கு வருகிறேன். திமுகவுக்கு இந்த தேர்தலில் முடிவுகட்ட வேண்டும். பாஜக ஆளும் மாநிலங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலங்களிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்திவிட்டனர். ம்த்திய பாஜக அரசு கொண்டு வந்த 10 சதவீத இடஒதுக்கீட்டை தமிழகத்தில் கண்டிப்பாக செயல்படுத்துவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 கோடி வாக்குகள்

நடிகர் எஸ்.வி.சேகர் பேசும்போது, ‘‘பொருளாதாரத்தில் நலிந்தபொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை யார் எதிர்க்கிறார்கள், யார் ஆதரிக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். இந்தஇடஒதுக்கீட்டில் உள்ள சமுதாயங்களில் 1 கோடி வாக்குகள் உள்ளன.இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்புதெரிவித்து ஆர்.எஸ்.பாரதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் எந்தக் கட்சி என்பதை பார்க்க வேண்டும். நமக்கு நல்லதுசெய்பவர்களுக்கு நல்லது செய்யவேண்டும். கெடுதல் செய்பவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். யாருக்கு வாக்களிக்கக் கூடாதுஎன்று தீர்மானமாக இருந்தால் தமிழகத்தில் வெற்றி சாத்தியமாகும். 10 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்துவது குறித்த அறிவிப்பு பாஜக, அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றால் நன்றாக இருக்கும்’’ என்றார்.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கி.சிவநாராயணன் பேசும்போது, “தமிழகத்தில் 74 தொகுதிகளில் வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் 8 ஆயிரமாக உள்ளது. 10 சதவீத இடஒதுக்கீடு பிராமணர்களுக்குமட்டுமல்ல. பல சமுதாயங்களுக்கும் சேர்த்துதான் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும்’’ என்றார்.

இந்தக் கூட்டத்தில் தெலுகு ப்ராமண சேவா சமிதி பவுண்டேஷன் தலைவர் பி.பாலசுப்பிரமணியன், தாம்ப்ராஸ் சங்க மாநிலத் தலைவர் என்.ஹரிஹரமுத்து அய்யர்,பொதுச்செயலாளர் டி.வரதராஜன், வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணஸ்வாமி, இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத், முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் மாநிலத் தலைவர் பாத்திமா அலி, தமிழ்நாடு ஏகத்துவ பிரச்சார ஜமாஅத் தலைவர் இப்ராஹிம், கல்வியாளர் மதுவந்தி, சமூக ஆர்வலர் உமா ஆனந்தன் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x