Published : 08 Mar 2021 03:56 AM
Last Updated : 08 Mar 2021 03:56 AM

கூட்டணிக்காக காங்கிரஸ் பேசியது உண்மை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தகவல்

மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணிக்காக காங்கிரஸ் பேசியதுஉண்மை என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை மின்ட் சந்திப்பு பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்று கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:

தமிழகம் ஐ.சி.யூவில் இருக்கிறது. அதை காப்பாற்றும் வைத்தியர்கள் நாங்கள் என்று நீங்கள் நினைத்து கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் செவிலியர்கள். நீங்கள் தான் வைத்தியர்கள்.

மூன்றாவது அணி வென்றதாக சரித்திரமே இல்லை என்று சொல்லி கொண்டு, சிதம்பரம் அன்டு சன்ஸ் காங்கிரஸுடன் வந்துசேருங்கள் என்று அழைக்கின்றனர். வெல்லாத கட்சியை எதற்காக அப்படி அழைக்கிறீர்கள்.

உங்களுக்கு வசனம் சொல்லிதருவது என் கடமை. மு.க.ஸ்டாலினுக்கும் வசனம் நாங்கள் தான்சொல்கிறோம் என்ற அடையாளம் தெரிகிறது. நாமே தீர்வு என்றுநாங்கள் சொன்னால் ஒன்றிணைவோம் வா என்று சத்தம் மாறாமல் சொல்வார். இல்லதரசிகளுக்கு ஊதியம் என்று முதல் கட்சியாக நாங்கள் தான் அறிவித்தோம். தற்போது குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 தருவேன் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

எங்களுடைய ஆட்சியில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்றோம். அதையே ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்று அறிவிக்கிறார். இரண்டும் ஒன்று தானே. 7 உறுதி மொழிகள் உட்பட அத்தனையும் காப்பி அடிக்கிறார். அப்படியாவது பாஸ் பண்ணவேண்டும் என்று அவசரம் வந்துவிட்டது.

எனது அப்பா காங்கிரஸில் இருந்தார். மரியாதை உண்டு. வெள்ளை காரர்களிடம் இருந்துநாட்டை மீட்ட அந்த கட்சியை சேர்ந்தவர்கள் கொள்ளைகாரர்களுக்கு வாட்ச் மேன்னாக இருப்பது வருத்தமாக இருக்கிறது.

மூன்றாவது அணியில் நம்பிக்கை இல்லை என்று கூறிவிட்டு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை தான். வதந்தி என்று அவர்கள் சொல்கிறார்கள். இல்லை என்று நான் சொல்கிறேன். யார் வந்தாலும் 6 சீட்டு தான். இவர்களும் கொடுத்ததை வாங்கி கொண்டு ஆறு மனமே ஆறு என்று வந்துவிடுகிறார்கள்.

100 ஆண்டுகள் பழமைவாய்ந்த கட்சியை உட்கார்ந்து பேசலாம் வாங்க என்று கூறினால் அங்கு சென்று தவழுகிறார்கள். 101 இடங்கள் வாங்கிய காங்கிரஸ் இன்று தவழ்ந்து செல்கிறது. இவ்வளவு பெரிய கட்சி தவழலாமா. சரி போய்விட்டீர்கள். மீண்டும் வருவீர்கள். தொழிலாளர்கள் ஒற்றுமை ஓங்குக என்று பேசியவர்கள் 6 தொகுதிகளுக்காக அங்கு இருக்கிறார்கள். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x