மரக் கூண்டிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்ட ‘அரிசி ராஜா’ யானை
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வரக்களியாறு வளர்ப்பு யானைகள் முகாமில் பாகன்களின் உத்தரவுக்கு `அரிசி ராஜா' யானை கீழ்ப்படிந்து வருவதால், மரக்கூண்டிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டது.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப் பகுதியில் இருந்து வெளியேறி, மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த அரிசி ராஜா என்ற காட்டு யானையை, கடந்த 2019 நவம்பர் 14-ம் தேதி வனத் துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிபட்ட காட்டு யானை அரிசி ராஜா, டாப்சிலிப் அருகேயுள்ள வரகளியாறு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள மரக்கூண்டில் (கரால்) அடைக்கப்பட்டது. மேலும், அந்த யானை இயல்பு நிலைக்குத் திரும்ப,பாகன்களால் பயிற்சியும் அளிக்கப்பட்டது. பாகன்களின் கட்டுப்பாட்டில் இருந்த அரிசி ராஜா யானை, 6 மாதங்களுக்குப் பிறகு மரக்கூண்டில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டது. ஆனால், சில நாட்களில் அந்த யானை பாகன்களுக்கு கீழ்ப்படிய மறுத்தது. மேலும், அதன் பாதத்தில் ஏற்பட்டபுண்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உருவானது. இதையடுத்து, அந்த யானை மீண்டும் மரக்கூண்டில் அடைக்கப்பட்டது. தொடர்ந்து அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததுடன், பாகன்கள் பயிற்சி கொடுத்தனர்.
இந்த நிலையில் அதன் புண்கள்குணமானதுடன், பாகன்களுக்கு கீழ்ப்படியத் தொடங்கியது. இதையடுத்து அரிசி ராஜா யானை, மீண்டும் மரக்கூண்டிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டது. அது தற்போது வளர்ப்பு யானைகள்முகாமில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் கூறும்போது, "பாகன்களுக்கு கீழ்ப்படிந்ததால் அரிசி ராஜா யானை, மரக்கூண்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. அதன் புண்களும் குணமாகிவிட்டன. யானைகள் வளர்ப்பு முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் அந்த யானைக்கு, இன்னும் சில பயிற்சிகளை பாகன்கள் கொடுத்து வருகின்றனர். பாகன்களின் உத்தரவுக்கு யானை கீழ்ப்படிந்து வருகிறது" என்றார்.
