

ரஜினியை அரசியலுக்கு இழுக்கும் முயற்சி தோல்வியடைந்ததால், மற்றொரு நடிகரை பாஜக பயன்படுத்த முயல்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கோவை பீளமேடு பகுதியில் பொதுவுடமை இயக்கத் தலைவர் கே.பாலதண்டாயுதம் சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் மாநிலச்செயலர் இரா.முத்தரசன் பேசும்போது, "தமிழத்தில் எப்படியும்காலூன்றிவிட வேண்டுமென்பதற்காக அனைத்து முயற்சிகளையும் பாஜக மேற்கொண்டு வருகிறது. நடிகர் ரஜினிகாந்தை எப்படியாவது அரசியலில் இழுத்துவிட்டு, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வாக்குகளை சிதறடிக்க வேண்டு மென்ற முயற்சி தோற்றுப்போனது. இதனால் தற்போது வேறொரு நடிகரைப் பயன்படுத்த பாஜக முயல்கிறது. பாஜக, அதிமுகவால் உருவாக்கப்பட்ட அணி தான் மற்றொரு அணி. அது, மூன்றாவது அணி அல்ல. திமுக கூட்டணியை வெற்றிபெறச் செய்வதன் மூலம், வகுப்புவாத கும்பலுக்கு தமிழகத்தில் இடமில்லை என்ற பாடம் புகட்ட சபதமேற்போம்" என்றார்.
தேசிய பொதுச் செயலர் து.ராஜா பேசும்போது, "மத்திய பாஜக அரசு, மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்து, மாநில நலன்களை எதிர்க்கிறது. இவற்றையெல்லாம் எதிர்கொள்ளும் ஆற்றல் அதிமுகவிடம் இல்லை. மோடியுடன் கைகோர்த்துக் கொண்டு, தமிழகத்தின் நலன்பற்றி யாரும்பேச முடியாது. எனவே, வரும் தேர்தலில் பாஜக கூட்டணிக் கட்சிகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்" என்றார்.