Published : 08 Mar 2021 03:57 AM
Last Updated : 08 Mar 2021 03:57 AM

வேட்பாளர்கள் அறிவிப்பதில் தாமதம்: சேலம் மாவட்டத்தில் களையிழந்த தேர்தல் களம்

சட்டப்பேரவைத் தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்க 4 நாட்கள் உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்காததால் சேலம் மாவட்டத்தில் தேர்தல் களம் விறுவிறுப்பு இல்லாமல் உள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே, சேலம் மாவட்டத்தில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் முதல்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தின. கடந்த 26-ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் களம் விறுவிறுப்படையும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டிருப்பதால், அனைத்து கட்சிகளிலும் வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், சேலம் மாவட்டத்தில் தேர்தல் பணிகள் சுறுசுறுப்பின்றி மந்தமாக உள்ளது.

மேலும், கடந்த இரு வாரங்களாக முக்கிய அரசியல் தலைவர்கள் வருகையும் குறைந்துள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு முடிவு செய்யாத நிலையில், கூட்டணி கட்சிக்கு தங்கள் தொகுதி ஒதுக்கப்பட்டால் என்ன செய்வது? என்ற குழப்பத்தில் பிரதான அரசியல் கட்சிகள் கூட தேர்தல் ஆரம்ப கட்ட பணிகளை தொடங்காமல் உள்ளன.

மேலும், பொது இடங்களில் சுவர் விளம்பரங்கள் செய்யக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவால் கடந்த கால தேர்தலைப்போல, சுவர் விளம்பரம் எழுதுவதற்கு சுவர்களை பிடிக்கும் வேலையும் அரசியல் கட்சிகளுக்கு இல்லாமல் போனது.

இதனால், வழக்கமான தேர்தல் காலத்தில் இருக்கும் ஒலி பெருக்கி சத்தம், அலங்கார வளைவுகள், சுவர் விளம்பரம், துண்டுப் பிரசுரங்கள் என தேர்தல் கால பிரச்சார அறிகுறி இல்லாமல் உள்ளது.

மேலும், வேட்புமனு தாக்கல் தொடங்க 4 நாட்களே எஞ்சியுள்ள நிலையிலும், தொகுதியில் எந்த கட்சி போட்டியிடும் என்பதே உறுதியாகாமல் இருப்பது, அனைத்துக் கட்சித் தொண்டர்களையும் தேர்தல் பணியில் சோர்வடையச் செய்துள்ளது.

மேலும், வெயிலின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அனைத்து கட்சியினருமே தேர்தல் பணியில் ஆர்வமின்றி, தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது ஒருபக்கம் இருக்க பொதுமக்கள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது, தங்கள் தொகுதியில் எந்தக் கட்சி போட்டியிடும் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என ஆர்வமுடன் விவாதிப்பதை பல இடங்களில் பார்க்க முடிகிறது.

இன்னும் ஓரிரு நாட்களில் முக்கிய அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவிக்க வாய்ப்பு இருப்பதால் அதன் பின்னர் வேட்பு மனு தாக்கல், தேர்தல் பிரச்சாரம் என வரும் நாட்களில் தேர்தல் களம் பரப்பரப்படையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x