Published : 08 Mar 2021 03:57 AM
Last Updated : 08 Mar 2021 03:57 AM

இன்று உலக மகளிர் தினம் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

சென்னை

உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: மகளிரின் உரிமைகளைப் பெறுவதோடு, பொருளாதார ரீதியாக சுயசார்புகளை அடைவதன் மூலமே அவர்களின் வாழ்வு ஏற்றம் பெற முடியும். இந்த லட்சியங்களை அடைவதே உலக மகளிர் தின வாழ்த்துச் செய்தியாக இருக்க முடியும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: பெண்களுக்கு நாம் வழங்க வேண்டிய அங்கீகாரங்கள் இன்னும் ஏராளமாக உள்ளன. பெண்களுக்கு கண்ணியமான, கவுரவமான வாழ்க்கையையும், பொதுவெளியில் அச்சமின்றி, சுதந்திரமாக நடமாடுவதற்கான உரிமையையும் வென்றெடுத்துத் தர வேண்டியது ஒட்டுமொத்த சமூகத்தின் உரிமை ஆகும். அதற்காக போராட இந்த நாளில் நாம் அனைவரும் உறுதிஏற்போம்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: பெண்கள் தாயாகவும், தாரமாகவும், சகோதரிகளாகவும் இருந்து, தொண்டுக்கும், தியாகத்துக்கும் இலக்கணமாக தங்கள் வாழ்வை அர்பணித்து கொள்கிறார்கள். அவர்கள் முன்னேற வேண்டுமென்றால் அதற்குரிய தகுதிகளை பெற சமூகம், அரசியல், பொருளாதாரம் இவை அனைத்திலும் அவர்கள் முழு பங்குபெற வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: குடும்பம், சமூகம், கல்வித் திட்டம், அரசு நடவடிக்கைகள், அமைப்புகள் என அனைத்திலும் பாலின சமத்துவத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை, போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து முன்னெடுக்கும்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: சமூக எழுச்சிக்கும், மலர்ச்சிக்கும் பெண்களின் பங்களிப்பு என்பது, மறைக்கவோ, மறுக்கவோ முடியாத ஒன்றாகும். மகளிர் விடுதலைக்காகவும், உரிமைகளுக்காகவும், அயராது தளராது நாளும் உழைப்போம் என சூளுரை மேற்கொள்வோம்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: மத்திய மாநில அரசுகள் பெண்களுக்கு கல்வியில், வேலை வாய்ப்பில், பாதுகாப்பில் இன்னும் அதிக கவனம் செலுத்தி அவர்களின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி: சமூக அடிப்படையிலும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்டவர்களையும், தாழ்த்தப்பட்டவர்களையும் முன்னேற்ற இடஒதுக்கீடு என்ற சமூக நீதி வழங்கப்படுவதைப் போல, பாலின அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மகளிரை முன்னேற்ற இட ஒதுக்கீடு என்ற பாலின நீதி வழங்கப்பட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x