

மகளிர் தினத்தை முன்னிட்டு ஆண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் படப்பை அருகே உள்ள மலையில் ஏறி கண்ணைக் கட்டிக்கொண்டு 155 அடி உயரத்தில் இருந்து கீழே இறங்கி பெண் சாதனை புரிந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் முத்தமிழ் செல்வி(38). ஜப்பான் மொழி பயிற்சியாளராக உள்ளார். இவர் "பெண்கள் விவகாரத்தில் ஆண்கள் கண்களை கட்டிக் கொண்டு இருக்கக் கூடாது" என விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பினார்.
இதற்காக உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, படப்பை அருகே மலைப்பட்டு கிராமத்தில் உள்ள மலைக் குன்றில் சுமார் 155 அடி உயரத்துக்கு ஏறி, அங்கிருந்து கண்களை கட்டிக் கொண்டு 58 விநாடிகளில் மேலிருந்து கீழே இறங்கி சாதனை படைத்தார்.
இவருடைய சாதனையைக் காண சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் அப்பகுதிக்கு வந்தனர். இவருடைய சாகசத்தை பார்த்து அனைவரும் பாராட்டு தெரிவித்தனர். மேலும் யூனிகோ உலக சாதனை புத்தகம் சார்பில் பாராட்டு சான்று வழங்கப்பட்டது.
இதுகுறித்து முத்தமிழ் செல்வி கூறும்போது, "மகளிர் தினம் என்பதால் மகளிருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மகளிருக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்கவும் இதற்கு துணை போகும் ஆண்களை கண்டித்தும் இந்த சாகச முயற்சியில் ஈடுபட்டேன். பெண்கள் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு உதவி செய்யாமல் ஆண்கள் கண்ணை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கின்றனர். பெண்கள் பாதிக்கப்படும்போது பல ஆண்கள் உதவ முன்வராமல், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிராகவே செயல்படுகின்றனர். எனவே அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கண்ணைக் கட்டிக்கொண்டு இந்த முயற்சியை மேற்கொண்டேன்" என்றார்.