

பிரபல நகைக்கடையில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.1,000 கோடிக்கும் அதிகமான வருமானத்தை கணக்கில் காட்டாமல் மறைத்து வைத்திருந்தது தெரியவந்ததாக வருமானவரித் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வருமானவரித் துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
தென்னிந்தியாவின் பிரபலமான நகைக்கடை மற்றும் தங்கவியாபாரி தொடர்புடைய இடங்களில் கடந்த 4-ம் தேதி வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். சென்னை, கோவை, திருச்சி, மதுரை, மும்பை, நெல்லூர், ஜெய்ப்பூர், இந்தூர், திரிச்சூர் உள்ளிட்ட 27 இடங்களில் சோதனை நடைபெற்றது. சோதனையில், ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கணக்கில் காட்டப்படாத வருமானம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ரூ.1.20 கோடி கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
போலி கணக்குகள்
பழைய நகையை வாங்கி புதிதாக மாற்றும்போது சேதாரம் என்று பல கோடி ரூபாய் கணக்கில் காட்டப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ஏராளமான பணத்தை பரிவர்த்தனை செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலிகணக்குகள் மூலம் தங்கத்தை வாங்கியது மற்றும் போலி கணக்குகள் மூலம் தங்கத்தை விற்றுவந்ததும் தெரியவந்துள்ளது.
பில்டர்களுக்கு கடன் கொடுத்ததற்கான ஆவணங்களும், ரியல் எஸ்டேட் துறையில் பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு இருப்பதற்கான ஆவணங்களும் கிடைத்துள்ளன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.