

கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.45-ல் இருந்து ரூ.30 ஆகவும், சின்ன வெங்காயம் ரூ.120-ல் இருந்து ரூ.60 ஆகவும் விலை குறைந்துள்ளது.
கடந்த மாதம் கோயம்பேடு சந்தைக்கு சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் வரத்து குறைந்ததால், அவற்றின் விலை உயர்ந்து வந்தது. பெரிய வெங்காயம் கிலோரூ.50 வரையும், சின்ன வெங்காயம் ரூ.120 வரையும் விலை உயர்ந்து இருந்தது. இதனால், வீடுகள் மற்றும் உணவகங்களில் வெங்காய பயன்பாடு குறைந்தது.
இந்நிலையில், வெங்காயத்தின் விலை குறைந்து வருகிறது. பெரிய வெங்காயம் கிலோ ரூ.45-ல்இருந்து ரூ.30 ஆகவும், சின்ன வெங்காயம் ரூ.120-ல் இருந்து ரூ.60 ஆகவும் விலை குறைந்து இருந்தது. மற்ற காய்கறிகளான தக்காளி, புடலங்காய் தலா ரூ.25,கத்தரிக்காய் ரூ.10, உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் ரூ.18, அவரைக்காய் ரூ.15, வெண்டைக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ.10, பாகற்காய், பீன்ஸ் தலா ரூ.30, முட்டைக்கோஸ் ரூ.8, கேரட் ரூ.20 பீட்ரூட் ரூ.12, முருங்கைக்காய் ரூ.60 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோயம்பேடு சந்தை காய்கறி மொத்த வியாபாரிகள் கூறும்போது, ‘‘கடந்த ஜனவரியில் தமிழகத்தில் பெய்த பருவம் தவறிய மழையால் சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டது. அதனால் வரத்து குறைந்து விலை உயர்ந்தது. மகாராஷ்டிராவில் இருந்து பெரிய வெங்காய வரத்து குறைந்ததால் அதன் விலையும் உயர்ந்து இருந்தது. தற்போது இரு வெங்காயங்களின் வரத்தும் அதிகரித்துள்ளது. அதனால் விலையும் குறைந்து வருகிறது’’ என்றனர்.