Last Updated : 08 Mar, 2021 03:57 AM

 

Published : 08 Mar 2021 03:57 AM
Last Updated : 08 Mar 2021 03:57 AM

அதிமுக கூட்டணியில் தொகுதி முடிவாகும் முன் மதுரையில் பிரச்சாரத்தை தொடங்கிய பாஜக

மதுரை தெற்கு தொகுதியில் கட்சியினருடன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக மாநில துணைத் தலைவர் ஏ.ஆர்.மகாலெட்சுமி.

மதுரை

அதிமுக - பாஜக கூட்டணியில் இரு கட்சிகளும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்ற விவரம் அறிவிக்கப்படாத நிலையில் மதுரை தெற்குத் தொகுதியில் பாஜக மாநில துணைத் தலைவர் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்து வருவது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜக வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளன. ஆனால் தொகுதிகள் எவை என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. மதுரை மாவட்டத்தில் மதுரை தெற்கு, வடக்கு, கிழக்கு தொகுதிகளை பாஜக கேட்டு வருகிறது. இதில் ஒரு தொகுதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மதுரை தெற்குத் தொகுதியில் பாஜக மாநில துணைத் தலைவர் ஏ.ஆர்.மகாலெட்சுமி நேற்று வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தார். இவர் ஏற்கெனவே தெற்குத் தொகுதியில் போட்டியிட முடிவு செய்து கரோனா ஊரடங்கு காலத்தில் முகக் கவசம் உள்ளிட்டவற்றை இத்தொகுதியில் வசிப்போருக்கு வழங்கி வந்துள்ளார்.

தொகுதிகள் ஒதுக்கீடு எண் ணிக்கை முடிவாவதற்கு முன்பே தெற்கு தொகுதியில் பாஜக தேர்தல் அலுவலகத்தை மாநிலத் தலைவர் முருகனை அழைத்து வந்து திறந்தார். இந்த சூழ்நிலையில் அவர் நேற்று தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கட்சியினருடன் ஊர்வலமாகச் சென்ற அவர் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தார். மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்த இடங்களில் மைக் பிடித்து பேசினார்.

இது குறித்து அவரது ஆதரவாளர் பொக்கிஷம் குமார் கூறுகையில், தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதை கன்னியாகுமரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். மதுரை தெற்கு தொகுதியில் ஏ.ஆர்.மகாலெட்சுமி தொடங்கி வைத்து பரப்புரை மேற்கொண்டார் என்று கூறினார்.

பாஜகவினர் மேற்கொண்ட பிரச்சாரம் தெற்குத் தொகுதியைச் சேர்ந்த அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை தெற்குத் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவான அதிமுகவைச் சேர்ந்த எஸ்.எஸ்.சரவணன், மீண்டும் இங்கு போட்டியிட கட்சித் தலைமையிடம் சீட் கேட்டு வருகிறார். தற்போது சரவணன், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆதரவாளராக உள்ளார். இதனால் இந்த முறை சரவணனுக்கு மதுரை தெற்குத் தொகுதியில் சீட் கொடுக்க அதிமுக மாநகர மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ பரிந்துரைக்க மறுத்துவிட்டதாக அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x