

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மக்களுக்கு உதவ வசதி படைத்தவர்களும், தொழிலதிபர்களும் முன் வர வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தாழ்வான இடங்களிலும், குடிசைப்பகுதிகளிலும் மழைநீர் உள்ளே புகுந்து, கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நான், கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை நேற்று நேரில் பார்வையிட்டு, நிவாரண உதவிகளையும் வழங்கினேன்.
அரசு தரப்பில் முழுமையான நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லையென்று கூறப்படுகிறது. உரிய முறையில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்படாததும், குளங்கள், ஏரிகள், கால்வாய்கள், ஓடைகள் போன்ற நீர் நிலைகள் சரிவர தூர்வாரபடாததுமே சேதத்திற்கு காரணமென்றும் மக்கள் கூறுகின்றனர்.
பருவ மழையை சமாளிக்க அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர்களும் அதிகாரிகளும் பேட்டியளித்தனர். அப்படி செய்திருந்தால் இந்த பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டிருக்காது. சரியான முன்னேற்பாடுகள் செய்யப்படாதது தான் இந்த சேதத்துக்கு காரணமாகும். கன மழையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது.
மக்களுக்கான நிவாரண உதவிகளும் சரிவர போய்ச் சேரவில்லை. எனவே, வசதி படைத்தவர்களும், தொழிலதிபர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவிடும் வகையில், தங்களால் ஆன உதவிகளை செய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று, உணவு, உடை மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், சாலைகள் பலத்த சேதமுற்று குண்டும், குழியுமாக மாறியுள்ளன. மின்கம்பங்களும், மரங்களும் சாய்ந்து கிடக்கின்றன. தொடர்ந்து கனமழை கொட்டி வருவதால், பொதுமக்கள் தங்களின் பாதுகாப்பைக் கருதி தாங்களும், தங்கள் குழந்தைகளும் வீட்டிலிருந்து, வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.