

உயர் நீதிமன்றத்தில் மீண்டும் காணொலி விசாரணை அறிவிக்கப்பட்டதற்கும், வழக்கறிஞர்கள் அறையை காலவரம்பின்றி மூடுவதற்கும் வழக்கறிஞர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கடந்தாண்டு மார்ச் மாதம் இறுதியில் மூடப்பட்டது. அதன் பிறகு காணொலி காட்சி மூலமாக விசாரணை நடைபெற்றது.
பத்து மாதங்களுக்கு பிறகு கடந்த பிப்ரவரியில் நேரடி விசாரணை தொடங்கப்பட்டது. இந்த விசாரணையில் அரசு வழக்கறிஞர்கள், வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்கள், அதிகாரிகள் மட்டும் பங்கேற்றனர். இதோடு காணொலி காட்சி மூலமாகவும் விசாரணைகள் நடைபெற்றன.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சுமார் ஓராண்டாக மூடப்பட்டிருந்த வழக்கறிஞர்கள் அறைகள் மார்ச் 1 முதல் திறக்கப்பட்டன.
ஓராண்டாக பூட்டப்பட்டிருந்ததால் இந்த 5 நாட்களும் வழக்கறிஞர்கள் அறைகளை சுத்தம் செய்யும் பணியை ஆட்களை வைத்து வழக்கறிஞர்கள் மேற்கொண்டு வந்தனர்.
அறைகளை சுத்தம் செய்து இன்று (மார்ச் 8 ) முதல் அறைகளில் அமர்ந்து முழுமையாக பணியைத் தொடங்கலாம் என எதிர்பார்த்திருந்த நிலையில் இன்று முதல் காலவரம்பி்ன்றி வழக்கறிஞர்கள் அறையை மூட பதிவாளர் ஜெனரல் உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவில், சென்னை மற்றும் தமிழகத்தில் பல பகுதிகளில் கரோனா பரவி வருவதால் இன்று முதல் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் காணொலி காட்சி வழியாகவே விசாரணை நடைபெறும் என்றும், மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள், பொதுத்துறை நிறுவன வழக்கறிஞர்கள் மட்டும் கரோனா நிபந்தனைகளைப் பின்பற்றி நேரில் ஆஜராகலாம், மற்ற வழக்கறிஞர்கள்/ வழக்கு தொடுத்தவர்கள் கண்டிப்பாக காணொலி காட்சி வழியாகவே ஆஜராக வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் இந்த முடிவுக்கு வழக்கறிஞர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்திற்கு வழக்கறிஞர்கள் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து வழக்கறிஞர்கள் சிலர் கூறியதாவது:
கரோனாவால் நீதிமன்றங்கள் மூடப்பட்டதால் வழக்கறிஞர்கள் கடுமையான தொழில் பாதிப்பை சந்தித்தனர். நீதிமன்றங்களில் நேரடி விசாரணை தொடங்கியதிலிருந்து வழக்கறிஞர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்றனர். இந்தச் சூழலில் நீதிமன்றங்களில் நேரடி விசாரணை ரத்து செய்யப்பட்டு மீண்டும் காணொலி விசாரணையை தொடங்குவது மீண்டும் தொழில் பாதிப்புக்கு வழி வகுக்கும்.
காணொலி விசாரணையில் வழக்கறிஞர்களால் தங்கள் கருத்துக்களை முழுமையாக எடுத்து வைக்க முடிவதில்லை.
எங்களின் வாதங்களை நீதிபதிகளுக்கு தெளிவாக தெரிவிக்க முடியவில்லை. தங்கள் தரப்புக்கு சாதகமான பிற நீதிமன்ற தீர்ப்பு நகல்களை நீதிபதிகளுக்கு காண்பிக்க முடிவதில்லை. இதனால் வழக்குகளில் உரிய தீர்வு கிடைக்காத சூழல் உள்ளது. இணைதள இணைப்பு அடிக்கடி வேகம் குறைவதால் இணைப்பு தானாக துண்டிக்கப்பட்டு வழக்கு முடிந்ததா? இல்லையா? என்ன ஆனது? என தெரியாமல் தவிக்கும் நிலையில் தான் உள்ளோம்.
கரோனா ஊரடங்குக்கு பிறகு உயர் நீதிமன்றங்களில் நேரடி விசாரணை தொடங்கப்பட்ட பிறகும், நேரடியாக வழக்குகளை தாக்கல் செய்ய அனுமதி வழங்கிய பிறகும் உயர் நீதிமன்ற வளாகங்களில் அதிகளவில் கரோனா பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவில்லை. தற்போது கரோனா தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. இதனால் காணொலி விசாரணையை தொடர வேண்டியதில்லை.
அரசு வழக்கறிஞர்களை அனுமதிப்பது போல் வழக்கில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களை மட்டும், அதுவும் அந்த வழக்கு விசாரணைக்கு வரும் நேரத்தில் நீதிமன்றத்தில் அனுமதிக்கலாம்.
ஓராண்டாக திறக்கப்படாத வழக்கறிஞர்கள் அறையை திறந்த கடந்த 5 நாளாக சுத்தம் செய்து வந்தோம். அறைகளை பயன்படுத்தாமலே ஒரு ஆண்டுக்கான மின் கட்டண நிலுவை தொகையாக பல ஆயிரம் ரூபாயை செலுத்தி விட்டு, இன்று முதல் அறையை பயன்படுத்தலாம் என நினைத்திருந்த போது அறைகளையும் காலவரம்பின்றி மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
காணொலி விசாரணை, வழக்கறிஞர்கள் அறைகளை மூடுவது ஆகியன கரோனாவால் கடும் தொழில் பாதிப்பை சந்தித்த வழக்கறிஞர்களின் நிலையை மேலும் மோசமடையச் செய்யும் என்றனர்.