Published : 07 Mar 2021 06:49 PM
Last Updated : 07 Mar 2021 06:49 PM

அனைவருக்கும் 6 தொகுதிகள் மட்டுமே; 180 தொகுதிகளில் போட்டி; நினைத்ததைச் சாதித்த திமுக: கூடுதல் தொகுதிகளுக்காகப் போராடும் மார்க்சிஸ்ட்

திமுக கூட்டணியில் காங்கிரஸ் தவிர அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரே ரீதியில் 6 சீட்டுகள் மட்டுமே என்பதில் திமுக உறுதியாக உள்ளது. இதன் மூலம் 180 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடுவது என்கிற நிலைப்பாட்டை திமுக நிறைவேற்றிக் கொண்டது.

திமுக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க ஐபேக் என்கிற அமைப்பை நடத்திவரும் பிரசாந்த் கிஷோரிடம் பொறுப்பை ஒப்படைத்தது. ஐபேக் அமைப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு ஆய்வுகளை நடத்தி பல்வேறு வியூகங்களை, பிரச்சார உத்திகளை திமுக தலைமைக்கு வகுத்துக் கொடுத்தது.

ஐபேக் நடத்திய ஆய்வில் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற 180 தொகுதிகளுக்குக் குறையாமல் போட்டியிட வேண்டும், அதற்குக் கீழ் குறைந்து போட்டியிட்டால் வெற்றி பெறலாம். ஒருவேளை அறுதிப் பெரும்பான்மை பெற முடியாமல் போக வாய்ப்பு எனத் தெரிவித்ததாகத் தகவல் வெளியானது.

அப்போதே இந்தத் தகவல் அரசல் புரசலாகக் கட்சி அணியினரிடையே பேசப்பட்டது. ஆனாலும் கூட்டணிக் கட்சிகள் அதிக தொகுதிகள் கேட்டுப் பெறலாம் என்ற எண்ணத்தில் இருந்தன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்கிய போது அனைத்துக் கட்சிகளும் இரட்டை இலக்கத் தொகுதிகளைக் கோரின. காங்கிரஸ் 50 தொகுதிகளுக்கு மேல் கோரியது.

ஆனால், திமுக தரப்பில் காங்கிரஸ் தவிர அனைத்துக் கட்சிகளுக்கும் கூறிய பதில் 4 தொகுதிகள். சிலருக்கு 2 தொகுதிகள், காங்கிரஸுக்கு 18 தொகுதிகள். இதனால் அதிர்ச்சி அடைந்த கட்சிகளுக்கு அடுத்த கோரிக்கை இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்தல் பிரச்சாரத்துக்கு 20க்கும் குறைவான நாட்களே உள்ளன. சின்னம் இல்லாமல் தேர்தல் ஆணையம் வழங்கும் சின்னத்தில் போட்டியிட்டால் சின்னம் மக்களுக்குப் பழகுவதற்குள் தேர்தலே முடிந்துவிடும். வெற்றியும் பறிபோகும். ஆகவே, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுங்கள் என்ற கோரிக்கையே அது.

இதற்கு மறுப்பு தெரிவித்து கூட்டணிக் கட்சிகளில் மதிமுகவும், விசிகவும், மமகவும் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், பாமகவைச் சமாளிக்க விசிக வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு 6 தொகுதிகளை ஒதுக்கி தனிச்சின்னம் என்றால் 6 தொகுதிகள் மட்டும்தான் என்று உடன்பாடு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

அப்போது அனைத்துக் கட்சிகளுக்கும் 6 தொகுதிகள் மட்டுமே. அதற்கு மேல் தரமாட்டோம் எனவும் திமுக தரப்பில் கூறியதாகத் தெரிகிறது. இதில் முரண்டு பிடித்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சூழ்நிலை அறிந்து 6 தொகுதிகளுக்கு உடன்பாடு கண்டது.

மதிமுகவுக்கு தனிச்சின்னம் என்றால் 4 தொகுதிகள். 6 தொகுதிகள் வேண்டுமென்றால் உதயசூரியன் சின்னம் என்ற நிபந்தனை வைக்கப்பட்டது. குறுகிய காலமே பிரச்சாரத்துக்கு உள்ள நிலையில் உதயசூரியனில் தமது கட்சிக்காரர்கள் போட்டியிட்டு வெல்லட்டும் என வைகோ ஒப்புக்கொண்டார்.

காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளிலிருந்து கூடுதலாகப் பெற மிகப்பெரும் போராட்டம் நடத்தி மக்கள் நீதி மய்யத்துடன் செல்லலாம் என்றும் கூட முடிவெடுத்திருந்த நிலையில், இறுதியாக 25 தொகுதிகளுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இறுதியாக எஞ்சி நிற்கும் பெரிய கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மட்டுமே. எப்போதுமே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை விட கூடுதலாக 2 தொகுதிகளாவது வாங்கினால் மதிப்பு என்பதால் 10 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இன்று பல மணி நேரம் நடந்த மாநிலக் குழுக் கூட்டத்தில் 10 தொகுதிகளுக்கும் குறைவில்லாமல் பெற வேண்டும் எனப் பேசப்பட்டதாகத் தெரிகிறது.

ஆனால், திமுக 6 தொகுதிகளை மட்டுமே கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுப்பதில் உறுதியாக இருப்பதால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போல் எண்ணிக்கை முக்கியமல்ல, லட்சியம்தான் முக்கியம் என்ற முடிவை எடுக்கத் தள்ளப்படலாம். அவ்வாறு தள்ளப்பட்டால் 6 தொகுதிகளுடன் மார்க்சிஸ்டும் கூட்டணியில் களம் காணும்.

1998-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகள் கேட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு மக்களவைத் தொகுதி மட்டுமே வழங்க முன்வந்தார் திமுக தலைவர் கருணாநிதி. ஒரு தொகுதிக்காக திமுகவுடன் போவதா? எனத் தன்மானம் தடுக்க 2 தொகுதிகளில் போட்டி, 37 தொகுதிகளில் பாஜக-அதிமுக கூட்டணியைத் தோற்கடிக்க தம்மை ஒதுக்கிய திமுகவுக்கே ஆதரவு என்கிற நிலைப்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்தது. இதை திமுக தலைவர் கருணாநிதி நெகிழ்ந்துபோய் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, அத்தகைய நிலைப்பாட்டை இன்றைய யதார்த்த நிலையில் எடுப்பதை விட 6 தொகுதிகளில் நின்று அனைத்திலும் வெல்லும் முடிவையும் மார்க்சிஸ்டுகள் எடுக்கலாம். ஒருவேளை 180 தொகுகளுக்கும் மேல் தான் நிற்கும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் 8 தொகுதிகள் வரை அளிக்க திமுக முன்வரலாம். ஆனால், அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு எனத் தெரியவருகிறது.

இதன்மூலம் ஒருவேளை மார்க்சிஸ்டுகள் 6 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டால் காங்கிரஸ் 25, விசிக 6, இந்தியக் கம்யூனிஸ்ட் 6, மார்க்சிஸ்ட் 6, ஐயூஎம்எல் 3, மமக 1 என 47 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்குகிறது திமுக. மதிமுக 6, மமக 1 இனி வரப்போகும் சிறிய கட்சிகள் என அனைவரும் உதயசூரியனில் போட்டியிடுவதால் திமுகவுக்கு 187 இடங்களில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதன் மூலம் தாங்கள் நினைத்ததைச் சாதித்துக்கொண்டது திமுக. இதுகுறித்து இடதுசாரி தொண்டர் ஒருவர் கூறும்போது, “கருணாநிதி போல் ஸ்டாலின் இல்லை. அவர் உறுதியாக இருந்துவிட்டார். ஜெயலலிதா பாணியில் இருக்கிறார் (ஜெயலலிதா கட்சிகளுக்கு தொகுதிகளை அள்ளிக் கொடுத்தவர்) என்றெல்லாம் பேசுகின்றனர். ஆனால், ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், குறைவான தொகுதிகள் பெறுவது, உதயசூரியன் சின்னத்தில் நிற்க ஒப்புக்கொள்வது என முடிவெடுத்த தலைவர்கள் எல்லாம் பலமுறை வெற்றி- தோல்வியை மாறி மாறி சந்தித்தவர்கள். மக்கள் பணியிலிருந்து விலகாதவர்கள்.

2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சில தொகுதிகளுக்காக தேர்தல் புறக்கணிப்பு செய்தவர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. அன்று ஜெயலலிதாவிடம் வைகோ நேரடியாகப் பேசியிருந்தால் சில தொகுதிகளைக் கூடுதலாகப் பெற்றிருக்கலாம், வென்றும் இருக்கலாம். மார்க்சிஸ்டுகள் 1998-ல் எடுத்த நிலைப்பாடு போல் பலமுறை கொள்கைக்காக நின்றவர்கள்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சொன்னது போன்று இது சில தொகுதிகள் கூடுதலாகப் பெற்று நின்று வெல்லும் தேர்தல் அல்ல. இரண்டு கொள்கைகள் நடுவே நடக்கும் தேர்தல் என்கிற கோணத்தில் பார்க்கவேண்டும். முத்தரசன் எண்ணிக்கை முக்கியமல்ல, லட்சியம் முக்கியம் என்று சொன்னது போல் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இயலாமையினால் திமுகவின் கண்டிஷனுக்கு ஒப்புக்கொண்டு வரவில்லை, கே.எஸ்.அழகிரி சொன்னதுபோல் மதச்சார்பற்ற என்ற நேர்க்கோடு இணைத்துள்ளது” என்றார்.

திமுக அதன் கூட்டணிக் கட்சிகள் ஆரம்பம் முதலே ஒன்றுபட்டு கொள்கை ரீதியாக நின்றதால் இந்தக் கூட்டணி, கட்சியின் நோக்கங்களுக்கு அப்பாற்பட்டு அவர் சொல்லும் காரணங்களுக்காகவும் இருக்கும் என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். கடந்த கால வரலாறும் அதைத்தான் சொல்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x