

கோவை அருகே 120 ஏக்கர் சீமைக்கருவேல மரங்களைத் தோண்டி தன்னார்வலர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர்.
கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்துக்குட்பட்ட அக்ரஹார சாமகுளம் 165 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் குளம் பராமரிப்பில் இல்லாததால், அதன் நீர்வழிப்பாதைகள் தடைப்பட்டிருந்தன.
சீமைக்கருவேல மரங்கள் குளத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருந்தன. நீண்டகாலமாகத் தண்ணீர் இல்லாமல் குளம் வறண்டு கிடந்தது. இதையடுத்து அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் இணைந்து குளத்தைத் தூர்வாரி பராமரிக்க ஏ.எஸ்.குளம் நீர்நிலை பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி, 2020 செப்டம்பர் 2-ம் தேதி முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் களப் பணியாற்றி வருகின்றனர். இதுவரை, நீர்வழிப்பாதைகளில் இருந்த மண்மேடுகள், குப்பை, புதர்கள் அகற்றப்பட்டு, கரை பலப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நீர்நிலை பாதுகாப்பு அமைப்பினர் கூறும்போது, "தொடர்ந்து ஆறாவது மாதமாக களப்பணி நடைபெற்று வருகிறது. மாவட்ட நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை, பொதுப்பணித்துறை ஆகியோரது ஒத்துழைப்புடனும் ஊர் பொதுமக்கள், தொழிலதிபர்களின் பங்களிப்புடனும் இதுவரை சுமார் 120 ஏக்கர் சீமைக்கருவேல மரங்களைத் தோண்டி அப்புறப்படுத்தியுள்ளோம். முட்கள், செடி, கொடிகளால் அடைந்து கிடக்கும் நீர்வழிப்பாதைகளை இயந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
7 நீர்வழிப்பாதைகளில் இதுவரை 2 நீர்வழிப்பாதைகள் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. மூன்றாவது பாதையைச் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. நீர்வழிப்பாதை அடைப்புகள் சரிசெய்யப்பட்டபின் மழைக் காலத்தில் தண்ணீர் வரும் என எதிர்பார்க்கிறோம்" என்றனர்.