

காமராஜர் ஆட்சி கோஷத்தை காங்கிரஸ் கைவிட்டுவிட்டதா என்று கேட்டதற்கு 10 நாளைக்கு முன் கூட பேசியுள்ளேன். பத்திரிகையாளர்கள் தினமும் செய்தித்தாளைப் படியுங்கள் என கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்துக்குப் பின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
110, 60, 40, 20 தொகுதிகள் என காங்கிரஸ் தேய்ந்து போய்விட்டதே? அடுத்த 5 ஆண்டுகளில் ஒன்றுமில்லாமல் போய்விடுமா காங்கிரஸ்?
ஏன் உங்களுக்கு இவ்வளவு ஆதங்கம். அரசியலில் ஏற்ற இறக்கம் இயல்பு. அரசியலில் மாபெரும் தலைவர்கள் மிகப்பெரும் தோல்வியைத் தழுவி இருக்கிறார்கள். பின்னர் எழுந்து வெற்றி பெற்றுள்ளார்கள். ஒரு அரசியல் கட்சி அதிக இடங்களில் போட்டியிடுவதோ, குறைவான இடங்களில் போட்டியிடுவதோ அன்றைக்கு இருக்கிற அரசியல் கள நிலவரத்தைப் பொறுத்தது. நாளைய தேர்தலில் நாங்கள் 200 தொகுதிகளில் கூட போட்டியிடலாம். ஆகவே, எண்ணிக்கையை வைத்து கேள்வி எழுப்பக்கூடாது. நாங்கள் ஒரு தேசியக் கட்சி. நாங்கள் மட்டுமே பாஜகவுக்கு மாற்றுக் கட்சி.
ராஜ்யசபா சீட்டு கேட்டு வலியுறுத்தப்பட்டதா?
நாங்கள் கேட்டுள்ளோம். அவர்கள் பரிசீலிப்பதாகச் சொன்னார்கள்.
காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று சொல்வதைக் கைவிட்டு விட்டீர்களா?
இல்லையே. நீங்கள் பத்திரிகைகள் படிப்பதில்லை என்று தெரிகிறது. பத்திரிகையாளர்கள் செய்தித்தாளை படிப்பதில்லை. நான் 10 நாட்களுக்கு முன் கூட காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று பேசினேன்.
2021 தேர்தலுக்குப் பின் அதற்கான கோஷத்தை பெரிதுபடுத்துவோம் என்று சொன்னேன். இந்த நேரம் பாஜகவை வீழ்த்துவதற்கான நேரம். காமராஜர் ஆட்சியைக் கொண்டுவருவதற்கான நேரம் அல்ல. பாஜகவை வீழ்த்திய பிறகு காமராஜர் ஆட்சி முதல் கடமை.
புதுவை குறித்த பேச்சுவார்த்தை நடந்ததா?
இல்லை. அங்கு தனி கட்சி அமைப்பு உள்ளது. அதற்கான தனிக்குழு அங்கு பேச்சுவார்த்தை நடத்தும்.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.