Published : 07 Mar 2021 11:52 AM
Last Updated : 07 Mar 2021 11:52 AM

கரோனா வைரஸை விட பாஜக பயங்கர ஆயுதமாகி வருகிறது: கே.எஸ்.அழகிரி விமர்சனம்

கோப்புப்படம்

சென்னை

இந்தத் தேர்தல் இரண்டு கட்சிகளுக்கான தேர்தல் அல்ல. இரண்டு தத்துவங்களுக்கு இடையேயான போட்டி. இந்தத் தேர்தலில் நாம் வெற்றிபெற வேண்டும் என்பது ஒரு ஆட்சி போய் இன்னொரு ஆட்சி வருவதல்ல. ஒரு தத்துவம் வீழ்த்தப்பட்டு இன்னொரு தத்துவம் எழுந்ததாகப் பொருள்படும் என ராகுல் காந்தி சொன்னதை மனதில் வைத்துச் செயல்படுவோம் என கே.எஸ்.அழகிரி பேசினார்.

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் 25 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவது என ஒப்பந்தம் ஆனதை அடுத்து அண்ணா அறிவாலயத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“இன்று திமுகவுடன் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளோம். இந்த நிகழ்ச்சி மகிழ்ச்சியையும், எழுச்சியையும் எங்களுக்கு அளித்துள்ளது. தமிழக காங்கிரஸ் பன்னெடுங்காலமாகவே சொல்லி வருகின்ற தத்துவம் எனவென்றால் மதச்சார்பற்ற இந்தக் கூட்டணி ஒரு நேர்க்கோட்டில் எங்களை இணைத்துள்ளது.

பல்வேறு அரசியல் கட்சிகள் சேர்ந்து இந்த மதச்சார்பற்ற கூட்டணியை அமைத்துள்ளோம். அதில் எங்களை இணைப்பது இந்த மதச்சார்பற்ற தன்மைதான். அது வெற்றிபெற வேண்டும் என்பதற்காகத்தான் திமுகவிலிருந்து இந்தக் கூட்டணியில் உள்ள ஒவ்வொருவரும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம்.

பாஜக இன்றைக்கு இந்தியாவுடைய மிகப்பெரிய நோயாக வளர்ந்துள்ளது. அது நோயாக இருப்பதைவிட மற்றவர்கள் மீதும் அதைப் பரப்பும் வேலையைச் செய்து வருகிறார்கள். கரோனா வைரஸை விட மிகவும் ஆபத்தான ஆயுதமாக பாஜக இன்று விளங்கி வருகிறது.

இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளில் உட்புகுவது, அதை உடைப்பது, அதை பலவீனப்படுத்துவது அல்லது அதில் இருப்பவர்களை கட்சி மாற வைப்பது, அரசாங்கத்தைக் கவிழ்ப்பது அல்லது அரசாங்கத்தைச் சீர்குலைப்பது உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் பாஜக ஈடுபடுகிறது.

இன்றைக்குப் புதுவையில் அதைப் பார்க்கிறோம். காங்கிரஸ் வேர் வலுவாக உள்ள புதுவையில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதற்காகவே ஒரு துணைநிலை ஆளுநர் அனுப்பப்பட்டார். அரசாங்கத்தின் அன்றாட வேலைகளில் கூட அவர் தலையிட்டார். தடுத்து நிறுத்தினார். சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்டார். ஆனால், இதற்கெல்லாம் மத்திய அமைச்சரவை, அரசு துணையாக நின்றதுதான் வருத்தமான செய்தி.

இன்றைக்கு தமிழகத்தில் பாஜக ஆதிக்கம் நிலை நாட்டப்படக் கூடாது. அவர்களுக்கு ஏவல் புரிகிற அதிமுகவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கிவிடக் கூடாது. சமூக நீதிக்கு எதிராகச் செயல்படும் இந்த சக்திகளை அப்புறப்படுத்த வேண்டும். இந்தத் தேர்தல் வெறுமனே ஆட்சிக்கட்டிலில் அமரவேண்டும் என்பதற்கான தேர்தல் அல்ல. அதையும் தாண்டி ஒரு கொள்கையை உயிரோட்டமாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் எங்களை இதில் ஈடுபடுத்திக் கொள்கிறோம்.

ராகுல் காந்தி தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிற இலக்கை மனதில் வைத்து தொடர்ச்சியாக இந்த மாநிலத்துக்குச் சுற்றுப்பயணம் வருகிறார். அரசியல் பிரச்சாரம் செய்கிறார். அவர் ஒரு தெளிவான கருத்தை எங்களிடம் சொன்னார்.

இந்தத் தேர்தல் இரண்டு கட்சிகளுக்கான தேர்தல் அல்ல. இரண்டு தத்துவங்களுக்கு இடையேயான போட்டி. இந்தத் தேர்தலில் நாம் வெற்றிபெற வேண்டும் என்பது ஒரு ஆட்சி போய் இன்னொரு ஆட்சி வருவதல்ல. ஒரு தத்துவம் வீழ்த்தப்பட்டு இன்னொரு தத்துவம் எழுந்ததாகப் பொருள்படும். எனவே, தேசிய தோழர்கள் மிகக் கடுமையாக உழைத்து இந்தத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும், நம்முடைய கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்று சொன்னார்.

அதன் அடிப்படையில் இந்தக் கூட்டணி அமைந்துள்ளது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். காரணம் என்னவென்றால் எல்லோரும் சேர்ந்து தேரை இழுப்பதுதான் பொது நியதி. 25 தொகுதிகள், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளோம். எல்லோரும் கடுமையாக உழைத்து அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்”.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x