Last Updated : 07 Mar, 2021 10:27 AM

 

Published : 07 Mar 2021 10:27 AM
Last Updated : 07 Mar 2021 10:27 AM

முல்லை பெரியாறு அணைக்கு எதிரான பிரச்சாரத்தில் கேரள அரசியல்வாதிகள்- மக்களை தூண்டி தேர்தலில் ஆதாயம் பெற முயற்சி

குமுளி 

முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவோம் என்று தொடர்ந்து கேரள அரசியல்வாதிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இருமாநில உறவுகள் பாதிக்கும் நிலை உள்ளது.

தேனி மாவட்டத்திற்கு அருகில் முல்லை பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாத
புரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் ஜீவாதார மாக இந்த அணை விளங்குகிறது. இந்த அணை பராமரிப்பு, பாதுகாப்பு உள்ளிட்டவற்றிற்காக பல லட்சம் ரூபாய்களை தமிழக அரசு செலவழித்து வருகிறது. கேரளாவைப் பொறுத்தளவில் கனமழை பெய்து வெள்ளம், இயற்கை சீற்றம் ஏற்படும் போதெல்லாம் அதற்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து வரும் நீர்தான் காரணம் என்று கேரள அரசியல்வாதிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அணை உடையும் நிலையில் உள்ளது, பாதுகாப்பற்ற நிலைக்கு மாறிவிட்டது என்றெல்லாம் தொடர்ந்து பிரச்சார களத்தில் முதன்மை கோஷமாக முன்னெடுக்கப்பட்டதால் கேரள மக்கள் மனதிலும் அணை குறித்து மாறுபட்ட மனோநிலை ஏற்பட்டு விட்டது. இதனால் அங்கு நடைபெறும் உள்ளாட்சி, சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் இடுக்கி மாவட்ட அரசியல்வாதிகள் அனைவரும் பெரியாறு அணையை முன்வைத்தே பிரச்சாரம் செய்து வருகின்றனர். இடுக்கி மாவட்டத்தைப் பொறுத்தளவில் தேவிகுளம், உடும்பன்சோலை, பீர்மேடு, இடுக்கி, தொடுபுழா உள்ளிட்ட 5 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

பீர்மேடு தொகுதியில்தான் முல்லை பெரியாறு அணை அமைந்துள்ளது. இத்தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிஜூமோள் என்பவர் மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார். ஒவ்வொரு தேர்தலிலும் இவரது பிரதான வாக்குறுதியாக முல்லைப் பெரியாறு அணை இருந்துள்ளது. அணை பாதுகாப்பற்றது, மாற்று அணை கட்டுவோம். அதற்கான திட்ட வரைவுகளை முன்னெடுப்போம் என்றே இவரது பிரச்சாரம் அமைந்துள்ளது.

இதே போல் அணையைச் சுற்றியுள்ள இடுக்கி தொகுதியில் ரோசி அகஸ்டின் (கேரள காங்கிரஸ்), பீர்மேடு தொகுதியில் பிஜூமோள் (இந்திய கம்யூனி்ஸ்ட்) உடும்பஞ்சாலை தொகுதியில் எம்எம்.மணி (மார்க்சிஸ்ட்), தேவிகுளம் தொகுதியில் ராஜேந்திரன் (மார்க்சிஸ்ட்) ஆகியோர் இதே வாக்குறுதியை முன்வைத்தே வெற்றி பெற்றுள்ளனர். இதில் ராஜேந்திரன், பிஜூமோள் ஆகியோர் தலா 3 முறையும் ரோசி அகஸ்டின் இரண்டாம் முறையும் வெற்றி பெற்று தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

இடுக்கி மாவட்டத்தில் உள்ள எஸ்டேட் நிர்வாகங்களுடன் பல்வேறு கட்சிகளும் இணக்கமாகவே உள்ளன. எனவே தேர்தல் வாக்குறுதி
யாக அடிப்படைப் பிரச்சினைகள் குறித்த பெரியளவில் பிரச்சாரம் செய்ய முடியாத நிலை அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு உள்ளது. எனவே பெரியாறு அணை குறித்த சர்ச்சையை பிரச்சார களத்தில் மையப்படுத்தி வருகின்றனர்.

உச்சநீதிமன்றம் நியமித்த மூவர் கண்காணிப்புக்குழு மற்றும் துணைக்குழு அணை பலமாகவே உள்ளது என்று ஒவ்வொரு முறையும் ஆய்வு செய்து அறிக்கை அளித்து வருகின்றன. இருப்பினும் தேர்தல் வெற்றிக்காக பெரியாறு அணை குறித்து கேரள அரசியல்வாதிகள் சர்ச்சைகளை கிளப்பிக்கொண்டே இருக்கின்றனர். வரும் கேரள சட்டமன்றத் தேர்தலிலும் இதற்கான பிரச்சாரங்கள் எழத் தொடங்கி உள்ளன.

மாற்று அணை கட்டுவதற்காக மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மதிப்பீட்டு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. எனவே புதிய அணை உருவாக்கப்பணி விரைவில் தொடங்கும், அணை பராமரிப்புப் பணிகளில் நவீன மாற்றம் வேண்டும் என்று கட்சிகள் தற்போது வலியுறுத்தி வருகின்றன. இடதுசாரி ஜனநாயக முன்னணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி (பாஜக), ஐக்கிய ஜனநாயக கூட்டணி (காங்.) கட்சிகள் தற்போதே இதற்கான களப்பணியில் ஈடுபட்டுள்ளன. இது குறித்து ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர்அன்வர் கூறுகையில், கேரளாவில் உள்ள கட்சிகள் வெவ்வேறு கோட்பாடுகளை கொண்டிருந்தாலும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரான நிலைப்பாட்டில் ஓரணியில் உள்ளன. அணை உடைந்து விடும் என்று 35 ஆண்டுகளுக்கு மேலாக தவறான பிரச்சாரம் செய்து வருகின்றனர். 125 ஆண்டுகளைக் கடந்தும் அணை வலுவாகவே உள்ளது. நிபுணர் குழுவும் இதனை உறுதிப்படுத்தி உள்ளனர்.

2018-ல் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஆலுவாய், எர்ணாகுளம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. அதற்கும் முல்லைப்பெரியாறு அணைக்கும் சம்பந்தமில்லை. ஆனால் விஷமப் பிரச்சாரம் மூலம் மலையாள மக்களை அங்குள்ள கட்சிகள் திசைதிருப்பி வருகின்றன. பெரியாறுஅணைக்கான வழித்தடத்தை மறித்துகட்ச், சபரிகிரி, பிளீச்சிங் என்ற மூன்று இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.

தென்காசி அருகே சிவகிரி, சுந்தரமலையில் இருந்து பெருக்கெடுத்து வரும் நீர் பெரியாறு அணைக்கு வருகிறது. பல்வேறு கிளை நதிகளின் சங்கமமாக இந்த அணை உள்ளது. ஆனால் கேரள அரசு பல நீர்வழித்தடங்களை மறித்து விட்டது. 142 அடி உயரத்திற்கு நீர் தேக்க நீதிமன்றம் அனுமதி அளித்தும் பல்வேறு குறுக்கீடுகளாலும், கேரள அரசியல்வாதிகளின் செயல்பாடுகளாலும் நீர்மட்டத்தை உயர்த்த முடியாத நிலை உள்ளது. எனவே தமிழக அரசியல்வாதிகள் ஒற்றுமையுடன் நமது உரிமைகளை காக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x