Published : 07 Mar 2021 03:14 AM
Last Updated : 07 Mar 2021 03:14 AM

வேட்பாளர்கள் மீதான குற்ற வழக்குகளை ஊடகங்களில் விளம்பரமாக வெளியிடுவது எப்படி?- படிவங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

சென்னை

வேட்பாளர்கள் மீதான குற்ற வழக்கு விவரங்களை செய்தித்தாள்கள், தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் கட்சியின் இணையதளம் உள்ளிட்ட ஊடகங்களில் விளம்பரமாக வெளியிடுவதற்கான படிவங்களை தேர்தல் ஆணையம் வெளி யிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்திய தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள், தண்டனை விவரம்,குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் தொடர்பாக அரசியல் கட்சிகள்பின்பற்ற வேண்டிய அறிவுரைகளைவழங்கியுள்ளது. இதற்கான படிவங்களையும் வெளியிட்டுள்ளது.

குறிப்பாக, செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வேட்பாளர்கள் குற்ற வழக்கு விவரங்களை வெளியிட படிவம் சி-1, செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள், வலைதளங்களில் அரசியல் கட்சிகள் வெளியிட படிவம் சி-2, தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலக பயன்பாட்டுக்கு படிவம் சி-3, குற்றவழக்குகள் குறித்த உறுதிமொழியை வெளியிட்டது தொடர்பாக வேட்பாளரின் அறிக்கை சி-4, அரசியல் கட்சியின் அறிக்கை சி-5, தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகப் பயன்பாட்டுக்கு சி-6 ஆகிய படிவங்களைப் பயன்படுத்த வேண்டும்.

மேலும், படிவம் சி-7 வாயிலாக, குற்ற வழக்குகள் குறித்த உறுதிமொழியை செய்தித்தாள்கள், சமூகஊடகங்கள் மற்றும் கட்சியின் வலைதளங்களில் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட 48 மணிநேரத்துக்குள் அல்லது வேட்புமனு தாக்கல் செய்யப்படும் நாளில் இருந்து 2 வாரங்களுக்கு முன், இவற்றில் எது முதன்மையானதோ அதன்படி வெளியிட வேண்டும்.

இதுதவிர, படிவம் சி-8 வாயிலாக குற்றவழக்குகள் குறித்த உறுதிமொழியை வெளியிட்டது தொடர்பாக அரசியல் கட்சியின் அறிக்கையை வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டதில் இருந்து 72 மணிநேரத்துக்குள் அல்லது வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டதற்கு 2 வாரத்துக்கு முன்னதாக இவற்றில் எது முந்தையதோ, அதன்படி அறிக்கை அளிக்கவேண்டும். மேலும், படிவம் சிஏ என்பது தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகப் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் தங்கள் மீதுள்ள குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை செய்தித்தாள்கள், தொலைக்காட்சி சேனல்களில், உரிய படிவங்களில் விளம்பரம் செய்யவேண்டும். வேட்பாளர்கள் மீதுள்ளகுற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை செய்தித்தாள்கள், தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் தங்களது கட்சி வலைதளங்களிலும் உரிய படிவங்களில் விளம்பரம் செய்தல் வேண்டும். இந்த விளம்பரங்கள் வேட்புமனு திரும்பபெறுவதற்கான கடைசி நாளுக்கு மறுநாள் முதல் வாக்குப்பதிவு முடிவுறுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன் வரை 3 முறை வெவ்வேறு நாட்களில் வெளியிடப்பட வேண்டும்.

இதுதொடர்பான விவரங்களை ‘www.elections.tn.gov.in’ என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x