Published : 07 Mar 2021 03:14 AM
Last Updated : 07 Mar 2021 03:14 AM

மீண்டும் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு; விமான நிலையங்கள், மாநில எல்லைகளில் கண்காணிப்பு: தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு கரோனா தடுப்பூசி செலுத்துகிறார் செவிலியர்.படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

சென்னை

தமிழகத்தில் மீண்டும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலையங்கள் மற்றும் மாநில எல்லைகளில் சுகாதாரத் துறை யினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் கரோனா பரவல் தொடங்கி ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் உச்சத்தை எட்டியது. தினசரி பாதிப்பு எண் ணிக்கை 6 ஆயிரத்தையும் உயி ரிழப்பு 100-க்கு மேலும் உயர்ந்தது. ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கையாலும் தடுப் பூசி பயன்பாட்டுக்கு வந்ததாலும் தமிழகத்தில் பாதிப்பும் உயிரிழப்பும் படிப்படியாகக் குறைந்து வந்தது.

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக கரோனா தொற்று மெது வாக அதிகரிக்கத் தொடங்கியுள் ளது. மொத்த பாதிப்பு 500-க்கும் குறைவாக இருந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 600-ஐ நெருங்கிக் கொண்டிருக் கிறது. சென்னையில் 200-க்கும் குறைவாக இருந்த பாதிப்பு 250-ஐ நெருங்கிவிட்டது.

குறிப்பாக, மற்ற மாவட்டங்களை விட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருப்பூர் ஆகிய மாவட் டங்களில் தொற்றின் பாதிப்பு அதி கரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று அதிகரித் திருப்பதே, தமிழகத்திலும் தொற்று அதிகரிக்க முக்கிய காரணம் என சுகாதாரத் துறையினர் கருது கின்றனர்.

இதனால் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, தூத்துக்குடி விமான நிலையங்களில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண் காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள் ளது. கரோனா தொற்று அதிக முள்ள மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு உடல் வெப்ப சோதனை கட்டாயமாக்கப்பட்டுள் ளது. காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனை முடிவு வரும் வரை அவர்களை கண்காணிப்பில் வைக்க வேண்டு மென உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில எல்லைகளிலும் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், கரோனா தொற்று தடுப்பு விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுப்பதை திட்டவட்டமாக உறுதி செய்ய வேண்டும். கடைகள், திருமண மண்டபங்கள் போன்றவற்றில் விதிமீறல் நடந்தால், அதன் உரிமை யாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மார்க்கெட், ரயில் நிலை யம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். தொற்று பாதித்தவரை கண்டறிந்ததும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

மேலும் சுப நிகழ்ச்சிகள், விடுதி கள், பயிற்சி மையங்களில் முறை யான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். அடுத்து வரும் சில மாதங்கள் மிகவும் சவாலானவை. இனி வரும் நாட்களில் தொற்று தடுப்பு நடவடிக்கையை தீவிரப் படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணைய ருக்கு சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தர விட்டுள்ளார்.

கரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி போடுவதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் 1,300-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுகாதாரம், காவல் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களைவிட முதியவர்கள், 45 வயதுக்கு மேற் பட்ட இணை நோய் பாதிப்புள்ள வர்கள் அதிக அளவில் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். விரை வாக அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்காக மேலும் மையங் களை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக பொது சுகா தாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகத்திடம் கேட்டபோது, “கடந்த 6 நாட்களில் மட்டும் முதியவர்கள் 1.36 லட்சம் பேரும் இணை நோய் பாதிப்புள்ளவர்கள் 79 ஆயிரம் பேரும் தடுப்பூசி போட் டுக் கொண்டுள்ளனர்” என்றார்.

ஒரேநாளில் 562 பேர்

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 334, பெண்கள் 228 என மொத்தம் 562 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 243 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 54,554 ஆக அதிகரித்துள்ளது. நேற்று அரசு மற்றும் தனியார் மருத் துவமனைகளில் முதியவர்கள் 4 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 12,517 ஆக உயர்ந்துள்ளது.

ஓராண்டு நிறைவு

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் பணிபுரிந்து வந்த காஞ்சிபுரம் 45 வயதுடைய பொறியாளர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ம் தேதி சென்னை வந்தார். அவருக்கு மார்ச் 6-ம் தேதி தொற்று உறுதியானது. இதன்படி, தமிழகத்தில் முதல் கரோனா தொற்று கண்டறியப்பட்டு ஓராண்டு ஆகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x