உங்கள் வாழ்க்கையை குத்தகைக்கு விடாதீர்கள்; வாக்களிக்கும்போது நேர்மையாக இருந்து நல்லவர்களை மட்டுமே தேர்ந்தெடுங்கள்: பிரச்சாரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் வலியுறுத்தல்

உங்கள் வாழ்க்கையை குத்தகைக்கு விடாதீர்கள்; வாக்களிக்கும்போது நேர்மையாக இருந்து நல்லவர்களை மட்டுமே தேர்ந்தெடுங்கள்: பிரச்சாரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் வலியுறுத்தல்
Updated on
1 min read

வாழ்க்கையை யாருக்கும் குத்தகைக்கு விடாதீர்கள். வாக்களிக்கும்போது நேர்மையுடன் செயல்பட்டு, நல்லவர்களை தேர்ந்தெடுங்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

சட்டப்பேரவை தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் கடந்த 3-ம் தேதி முதல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தி.நகர் தாமஸ் சாலையில் அவர் நேற்று மாலை திறந்த காரில் நின்றபடி பிரச்சாரம் செய்தார். அப்போது, கூடியிருந்த மக்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:

பெண்களை நம்பித்தான் மக்கள் நீதி மய்யம் கட்சி இருக்கிறது. வீட்டை ஆளும் பெண்களின் ஆசியுடன் நாட்டை ஆள ஆசைப்படுகிறேன். அதனால்தான் இல்லத்தரசிகளுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்று தைரியமாக அறிவித்தோம். எங்களை பார்த்து பிற கட்சிகளும் இத்திட்டத்தை அறிவிக்க ஆரம்பித்துவிட்டன.

தலைமுறைக்கும் சொத்து

தமிழகத்தை மாறி மாறி ஆட்சிசெய்தவர்கள் அவர்களது தலைமுறைக்கும் சொத்து சேர்த்து வைத்தார்கள். அதனால், எத்தனையோ தேர்தல்கள் வந்துபோனாலும், ஆட்சிகள் மாறினாலும், மக்களின் வாழ்க்கைத் தரம் இன்னும் மாறாமல் அப்படியேதான் உள்ளது. மக்கள் தங்களது அடுத்த தலைமுறை பற்றி யோசிக்க வேண்டிய நேரம் இது. இந்த முறையாவது சிந்தித்துப் பார்த்து வாக்களிக்க வேண்டும்.

சரியான அரசியல்

தமிழகத்தில் நேர்மை இன்னும்இருக்கிறது என்பதற்கான அடையாளம்தான் இங்கு கூடியிருக்கும் கூட்டம். மக்கள் தங்கள்நேர்மையை, வாக்களிக்கும்போது காட்ட வேண்டும். உங்கள் வாழ்க்கையை யாருக்கும் குத்தகைக்கு விடாதீர்கள். நல்லவர்கள், நேர்மையானவர்களின் கையில் கொடுங்கள். இனி வரும் அரசியல் சரியாக இருந்தால் மக்களின் வாழ்க்கைத் தரம் மாறும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் பகுதியில் திறந்த காரில் சென்றபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in