

காஞ்சிபுரம் பகுதியில் போலி மதுபானத் தொழிற்சாலையில் லட்சக்கணக்கான மதிப்புள்ள போலி மதுபானங்கள் தயாரிக்கப்பயன்படும் மூலப் பொருட்கள் மற்றும் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட ரூ.14 லட்சம் கள்ள நோட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை அமலாக்கப் பிரிவுபோலீஸார் மத்திய புலனாய்வு பிரிவு போலீஸாருடன் இணைந்துகாஞ்சிபுரம் பகுதியில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது திம்மசமுத்திரம் பகுதியில் போலி மதுபானத் தொழிற்சாலை இயங்குவதாக தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீஸார் திம்மசமுத்திரம் அருகே உள்ள சித்திரைமேடு பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது கலையரசன் என்பவரின் வீட்டை சோதனையிட்டபோது, அங்கு ஹாலோ கிராம் ஸ்டிக்கர், மது பாட்டில்கள், ஆல்கஹால் மீட்டர், காலி கேன்கள், மற்றும் கலர் பவுடர்கள், 105 லிட்டர்எரிசாராயம் உள்ளிட்ட போலி மதுபானம் தயாரிக்கும் தொழிற் சாலை இயங்குவதற்கு தேவையான பொருட்கள் இருந்ததை கண்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். இவற்றையும் அங்கு இருந்த 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல்செய்து, காஞ்சி மதுவிலக்கு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அந்த வீட்டில் இருந்த கலையரசன், துளசி ஆகியோரையும் கைது செய்தனர்.
மேலும் அங்கிருந்து கலர் ஜெராக்ஸ் இயந்திரங்களை பயன்படுத்தி ஜெராக்ஸ் மூலம் போலி ரூபாய் நோட்டுகள் எடுக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.14 லட்சத்து 11 ஆயிரத்து 200 ஆகும்.
மற்றொருவர் தலைமறைவு
அமலாக்கப் பிரிவு போலீஸாரின் தொடர் விசாரணையில் இந்த போலி மது தயாரிப்பு மற்றும் கலர் ஜெராக்ஸ் பணம் தயாரிப்பில் நந்தகுமார் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் போலீஸார் தேடி வருகின்றனர். இதுபோல் ரூபாய் நோட்டுகளை தேர்தல் நேரத்தில் விநியோகிக்க தயாரித்துள்ளனரா என்ற கோணங்களில் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள கலையரசனின் வாகனத்தில் அரசியல் கட்சி ஒன்றின் கொடியும், அரசியல் தலைவர் ஒருவரின் படமும் இருந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து எந்த நோக்கத்துக்காக இவை தயாரிக்கப்பட்டுள்ளன, இதன் பின்னணியில் வேறு யாராவது உள்ளனரா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.